Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெற்கு டெல்லி பகுதியில் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 21.10.2010

தெற்கு டெல்லி பகுதியில் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் இடிப்பு

புதுடெல்லி, அக். 21: தெற்கு டெல்லி பகுதியில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். காமன்வெல்த் போட்டி சமயத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர். அதனால் அவர்களின் பாதுகாப்பு கிடைக்காததால், அங்கீகாரமற்ற கட்டிடங்களை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தெற்கு டெல்லி பகுதியில் பல பில்டர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிடங்களில் மாற்றங்களை செய்து கொண்டனர். காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக கட்டி முடித்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டி முடிந்து போலீசார் அனைவரும் வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிட்டனர். இதனால் அங்கீகாரமற்ற கட்டிடங்களை இடிக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதன்படி, சவுத் எக்ஸ்டன்சன், லஜ்பத் நகர், புல் பிரஹலாத்பூர் மற்றும் ஷியாம் நகர் ஆகியவற்றில் அங்கீகாரமற்ற மற்றும் ஒப்புதல் பெறாத கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக இடித்து தள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காமன்வெல்த் போட்டியின்போது, அவசர அவசரமாக அனுமதியின்றி கட்டிடங்களை கட்டியவர்களும், அதில் அங்கீகாரமின்றி மாற்றங்களை செய்தவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

Last Updated on Thursday, 21 October 2010 09:17