Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகராட்சி தலைவர் உறுதி

Print PDF

தினகரன்                 28.10.2010

குன்னூரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகராட்சி தலைவர் உறுதி

குன்னூர், அக்.28: நகரிலுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமை யாக அகற்றப்படும் என்று மாதாந்திர கூட்டத்தில் நகராட்சி தலைவர் உறுதி அளித்தார். குன்னூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம்

சத்தார்(அதிமுக): மார்க் கெட் பகுதியில் நடைபாதை குண்டும், குழியுமாக உள்ளது. பார்க்கிங் வசதியின்றி வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். இதற்கு நகராட்சி நடவடிக்கை என்ன?

தலைவர்: மார்க்கெட் பகுதியில் இண்டர்லாக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்கும் திட்டம் விரைவில் துவங்கும். பார்க்கிங் வசதி ஏற்படுத்த கணேஷ் தியேட்டர் அருகே இடம் பார்க்கபட்டுள்ளது.

அனீபா(முஸ்லிம் லீக்): மார்க்கெட் வியாபாரிகள் கடை உரிமத்தை புதுப்பிக்க பணம் கட்டியும் உத்தரவு கிடைக்க பெறவில்லை.

தலைவர்: அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயராம்(அதிமுக): குன்னூர் நகரில் எத்தனை பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.நகர், வேளாங்கண்ணி நகர் பகுதியில் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுப்பது எப்போது?.

நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாததால் அலுவலக பணியில் குளறுபடி ஏற்படுகிறது. பொறியாளரும் முறையாக பணி மேற்கொள்வதில்லை. வி.பி தெரு ஓடை மீது மேல்தளம் அமைக்கும் பணி என்ன ஆனது.

ஆப்பிள் பி குடிநீர் திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக வரும் கூட்டத்தில் நான் பேச மாட்டேன்.

தலைவர்: நகர பகுதியில் சித்தி விநாயகர் தெரு கிராமத்தில் 59 மின் இணைப்பும், அம்பேத்கர் நகரில் 20 இணைப்பும், ராஜாஜி நகரில் 60 இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எம்.ஜி.ஆர் நகர், வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய பின்னர் தான் குடியிருப்புகள் கட்டி கொடுக்க முடியும். நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தாலும் அலுவலக பணியில் பாதிப்பு இல்லை. புதிய கமிஷனர் 15 நாட்களில் நியமிக்கப்படுவர்.

விபி தெரு ஓடை மீது பார்க்கிங் வசதிக்காக மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழ்பகுதியில் கற்கள் அதிகளிவில் இருப்பதால் பைல் பவுண்டேஷன் முறையில் மேல் தளம் அமைக்கப்படும்.

ஆப்பிள் பி பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. தீபாவளி முடிந்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும்.

சேகர்(அதிமுக): நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் குன்னூர் கிளப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த ஊழியர்கள் குப்பை சேகரிக்க வராததால் இப்பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மாதந்தோறும் இவர்களுக்கு உரிய தொகையை நகராட்சி வழங்கி வருகிறது. பணிகளையும் நகராட்சி கண்காணிக்க வேண்டும். அல்லது டெண்டரை ரத்து செய்து வேறு நபருக்கு வழங்க வேண்டும்.

தலைவர்: இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரரருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு 2 நாட்களில் சரி செய்யப்படும்.

சையது முபாரக் (அதிமுக): 8,9,18 வார்டுக்கு செல்லும் இணைப்பு பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பருவ மழையில் பாலம் சேதம் அடையும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். மாடல் ஹவுஸ் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

தலைவர்: நாளை 3 வார்டு கவுன்சிலர்களுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கின்றனர்.

இதனால் குரங்குகள் தொல்லை குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பின் நடவடிக்கை எடுக்கப் படும்.

செல்வம்(திமுக): நகர பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட தெரு விளக்குகள் 2 நாட்களில் வெடித்து சிதறியது. பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்துள்ளளது.

தலைவர்: அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்க்க வேண்டும்.

சார்லி(திமுக): நகர பகுதியில் வசதி படைத்தவர்கள் சிலர் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்ரமித்து வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டிடிகே சாலையில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய நகராட்சியின் 5 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை என்ன?.

தலைவர்: நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்று கொள்ள முடியாது.

ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றார்.