Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்              01.11.2010

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

சீர்காழி, நவ.1: நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அன்புச்செழியன், செயல் அலுவலர் தங்கையன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாரதிதாசன் தீர்மானங்களை வாசித்தார்.

கவுன்சிலர் சரவணன் பேசுகையில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதிகளில் பன்றிகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்குவீதியில் சாலைகளில் இரவு நேரங்களில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் செந்தில்முருகன், எனது வார்டில் உள்ள கைப்பம்பு தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேடான பகுதியில் அமைத்து தர வேண்டும். மூர்த்தி பேசுகையில், எனது வார்டில் ரயில்வே ரோடு செல்லும் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்லும் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் வழியாக கழிவு நீர் உள்ளே சென்று விடுகிறது. உடனடியாக உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

பூங்கோதை பேசுகையில், எனது வார்டில் மின் விளக்குகள் எரியவில்லை. கைப்பம்புகள் செயல்படவில்லை. சுடுகாடு செல்லும் பாதை சேதமடைந்துள்ளது என்றார். நாடி ராஜேந்திரன் பேசுகையில், எனது வார்டில் உள்ள ஆடுகள் மாடுகள் அடைக்கும் பட்டி செயல்படாமல் உள்ளது. இதனை செயல்படுத்த வேண்டும். அல்லது கழிப்பறைகள் கட்டி தர வேண்டும் என்றார். கவுன்சிலர் சரசா பேசுகையில், கொத்த தெருவில் கைப்பம்பு அடித்து தரவேண்டும். பொதுமக்கள் குப்பைகளை கொட்ட குப்பைத்தொட்டி வைக்கவேண்டும் என்றார். துணைத்தலைவர் அன்புச்செழியன், இரட்டை பிள்ளையார் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கொட்டகை போடப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோவிந்தராஜன் பேசுகையில், எனது வார்டில் எரியாத மின் விளக்குகள், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் ராஜேந்திரன், எனது வார்டில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது என்றார். பேருராட்சி தலைவர் மோகன் ராஜ், நாய் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதிய நிதி வந்தவுடன் சாலைகள், மின்விளக்குகள் சரிசெய்யப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.