Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் விதிகளை மீறும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கால்வாய்களும் தப்பவில்லை

Print PDF

தினகரன்              16.11.2010

வேலூர் மாநகராட்சியில் விதிகளை மீறும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கால்வாய்களும் தப்பவில்லை

வேலூர், நவ.16: ‘வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் விதிகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மற்றும் ஆக்ரமிப்புக்கள் மீது முறையான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் தொன்மை நகரங்களில் வேலூரும் ஒன்று. 1866ல் நகராட்சியாகி 2008ல் மாநகராட்சியானது. இந்நகரமைப்பு ஒழுங்கற்ற வடிவமைப்பை கொண்டது. குறுகிய தெருக்களுடன் உள்ள இந்நகரின் கிழக்கு பகுதியில் கோட்டைமலை காணப்படுகிறது.

ஆகவே, சிறிது மழை பெய்தாலும் தெருக்களில் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து மக்களை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கும். ஆங்காங்கு கால்வாய்களும், கானாறுகளும் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

ஓட்டேரியில் தொடங்கி சங்கரன்பாளையம், கஸ்பா, முள்ளிப்பாளையம் வழியாக பாலாறு வரையுள்ள நிக்கல்சன் கால்வாய், பகவதி மலையில் இருந்து வேலப்பாடி, டிட்டர்லைன் வழியாக அகழி வரை ஒரு கால்வாய், சலவன்பேட்டையில் இருந்து குட்டைமேடு, ஓல்டு டவுன் வழியாக அகழி வரை உள்ள கால்வாய் என இவை அனைத்தும் மலையில் இருந்து வழியும் ஊற்று நீர் மற்றும் மழைநீரை கொண்டிருந்த கால்வாய்களாகும்.

இதுதவிர கோட்டை மலையில் இருந்து பில்டர்பெட் ரோடு வழியாக அகழி வரை செல்லும் கால்வாய் ஏற்கனவே குட்டைமேட்டில் இருந்த கால்வாயுடன் இணைந்து அகழி வரை செல்கிறது. மேலும், சைதாப்பேட்டை மலையில் இருந்து பிடிசி ரோடு, ஆற்காடு சாலை என தலா இரண்டு கால்வாய்களும் பாலாறு வரை சென்றன.

வேலூரின் நிலத்தடி நீராதாரமாக விளங்கிய இக்கால்வாய்கள் முழுவதும் நாளடைவில் சாக்கடை நீர் செல்லும் அவலநிலைக்கு சென்றன. இவ்வளவு கால்வாய்கள் இருந்தபோதும் இப்போது ஒரு கால்வாயில் கூட மழைநீர் வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அதோடு பெரும்பாலான கால்வாய்கள் இன்று ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. மாநகராட்சி அனுமதி பெறாமலேயே பல இடங்களில் கால்வாயே தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

மாநகரின் 50 சதவீத கழிவுநீரை வெளிக்கொண்டு காட்பாடி சாலையை ஒட்டி செல்லும் கானாற்றை ஆக்கிரமித்து பெரியளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல் வேலூரில் அனுமதியின்றி செயல்படும் 600க்கும் மேற்பட்ட மன்சில்கள் என்ற விடுதிகள், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக கட்டமைப்புகளுடன் உள்ள வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தற்போது விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மாநகரமைப்பு அலுவலர் கண்ணனிடம் கேட்ட போது, ‘இதுவரை விதிகளை மீறி கட்டிடம் கட்டியதாக 40 முதல் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டவர்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கானாறுகளின் மீதுள்ள ஆக்ரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அவை இடித்துத் தள்ளப்படும்என்றார்.