Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 144 கோயில்களை அகற்ற முடிவு

Print PDF

தினகரன்                   23.11.2010

திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 144 கோயில்களை அகற்ற முடிவு

திருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள 144 கோயில்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தற்காலிக மற்றும் நிரந்தர கோயில்கள், கடைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ், நகராட்சி ஆணையாளர் இளங்கோ மற்றும் டிஎஸ்பி ராஜசேகர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. பூக்கடை அருகே உள்ள செட்டிப்பிள்ளையார் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி, இந்த கோயில் நேற்று அகற்றப்பட்டது. பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கோயில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையறிந்த வர்த்தகர்கள் பலரும் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

இதுகுறித்து உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ் கூறியதாவது:

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகள், சிறு கோயில்கள் அகற்றப்படவுள்ளது. போக்குவரத்திற்கு இவை பெரும் தடையாக உள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். திருச்செங்கோடு துணைக் கோட்டத்தில் நெடுஞ்சாலையில் இடையூராக உள்ள 144 கோயில்கள் படிப்படியாக அகற்றப்படும் என்றார். திருச்செங்கோடு பூக்கடை அருகே இருந்த செட்டிப்பிள்ளையார் கோயில் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.