Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கன்னியாகுமரியில் 25 ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினகரன்               25.11.2010

கன்னியாகுமரியில் 25 ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

நாகர்கோவில், நவ.25: கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 25க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகளை அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.

கன்னியாகுமரியில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தற்போது வந்து செல்ல துவங்கியுள்ளனர்.

சீசனையொட்டி கன்னியாகுமரி பகுதியில் 286 தற்காலிக கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதியளித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வியாபாரிகள் சிலர் தற்காலிக கடைகளை அமைத்து பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். சிலர் சிற்றுண்டி கடைகளையும் அமைத்திருந்தனர். இதனால் தங்களுக்கு விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி கடைகள் ஏலம் எடுத்திருந்த கடைகாரர்கள் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பையாவை சந்தித்து முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. கன்னியா குமரியில் தங்கநாற்கர சாலை நிறைவு பெறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் இருந்து காந்திமண்டபம் வரை சாலையின் ஒருபுறம் முறைப்படி ஏலம் எடுத்த வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். இதன் எதிர்புறத்தில் ஆக்ரமிப்பாளர்கள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.