Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புனேயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டன

Print PDF

தினகரன்                10.12.2010

புனேயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டன

புனே, டிச. 10: ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கோவில்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் 12 கோவில்கள் இடிக்கப்பட்டன.

புனே நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்ட கோவில்கள் மற்றும் கட்டிடங்களை இடிக்க புனே மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடத்தில் கோவில் மற்றும் சட்டவிரோத கட்டிடம் கட்டுவதற்கு எதிராக கடந்த 2009ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இந்த நடவடிக்கையை புனே மாநகராட்சி எடுத்து வருகிறது.

புனேயில் மட்டும் சாலை ஓரமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் 943 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றன. இதனால் இவற்றை இடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சியின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரிவினர் ஈடுபட்டனர்.

நேற்று அவுண்ட், பானெர் மறும் பாஷன் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கோவில்களை இடிக்க அதிகாரிகள் சென்றனர்.ஆனால் வழிபாட்டு தலங்கள் நீண்ட காலமாக அந்த இடங்களில் இருப்பதால் அவற்றை இடிக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் அங்கு திரண்டு அதிகாரிகளை தடுத்தனர்.

கோவில்களை இடிக்கும் போது பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் எழுந்தது.

சுமார் 4 மணி நேரமாக இந்த இழுபறி நிலை நீடித்தது. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன.

இது பற்றி அவுண்ட் வார்டு அதிகாரி நாராயண் சாப்லே கூறுகையில்,"உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோவில்களை இடித்து தள்ள வேண்டியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இது தெரிவதில்லை. வழிபாட்டு தலங்கள் என்று கூறி அவற்றை அகற்றுவதற்கு அனுமதி தர மறுக்கின்றனர். நீதிமன்ற உத்தரவின்படியே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீதமுள்ள ஆக்கிரமுப்பு கோவில்களை இடிக்கும் நடவடிக்கையும் போலீஸ் பாதுகாப்புடன் தொடரும்" என்றார்.

ஆனால் இது பற்றி பொதுமக்கள் கூறுகையில்,"சட்டவிரோத கோவில்கள் என்று கூறும் மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடிப்பதற்கு முன்பாக முறைப்படி நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்" என்றார்.

கடந்த 2 நாட்களில் 12 கோவில்களை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேலும் 532 கோவில்களை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.