Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர்     22.12.2010

மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்

மேடவாக்கம்:மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் 21 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என, பொதுபணித்துறை சார்பில் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.அவ்வாறு, கட்டடங்களை அகற்றாத பட்சத்தில் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.மேடவாக்கம் பெரிய ஏரி 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீர் மூலம் விவசாயம் பார்க்கப்பட்டது.

அப்போது, ஊர் பொதுமக்களே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.சென்னை புறநகர் வளர்ச்சியடைய ஆரம்பித்த பின், விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பின், ஏரியும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதையடுத்து, ஏரி பராமரிப்பு என்பது அரிதாகிப்போனது. இருப்பினும், அந்த ஏரி நீர் மேடவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரை பாதுகாத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியின் ஒரு பக்க கரையை உடைத்து, உள்ளே நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள், ஏரி இடங்களை கூறு போட்டு சொற்ப விலைக்கு பலரிடம் விற்பனை செய்துள்ளனர்.இந்த வகையில் 15 ஏக்கருக்கும் அதிகமான ஏரி இடம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.நீலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து "தினமலர் ' அவ்வப்போது படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டு வருகிறது. அதன் நடவடிக்கையாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.சில மாதங்களில் அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்றது. இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் ஏரியின் ஒரு சில பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.அதில், நோட்டீஸ் அளித்த 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.