Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய ஆதாரம்: விவரம் சேகரிக்கிறது சி.எம்.டி.ஏ.,

Print PDF

தினமலர்                 27.07.2012

விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய ஆதாரம்: விவரம் சேகரிக்கிறது சி.எம்.டி.ஏ.,

 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான ஆதாரங்களை கேட்டு, கட்டட உரிமையாளர்களுக்கு தனித்தனி கடிதங்கள் அனுப்பும் பணிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் தொடர்பாக, ஜூலை 24ம் தேதிக்குள் அவசரச் சட்டம் பிறப்பித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கடந்த மாதம் 4ம் தேதி, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப் படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை, தமிழக அரசு கடந்த வாரம் பிறப்பித்தது.

வழக்கு தாமதமாகிறது:இதையடுத்து, இவ்வழக்கு, நேற்று முன்தினம் (ஜூலை 24ம் தேதி) விசாரணைக்கு வரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.ஆனால், அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், தலைமை நீதிபதியை அணுகி, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்; வழக்கு விசாரணையில் ஆஜராக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை, செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

கண்காணிப்புக்குழு கூட்டம்;விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டால் அமைக்கப் பட்ட கண்காணிப்புக் குழுவின் கருத்தை கேட்காமல், தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்து உள்ளதாக, குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவசகாயம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

கடிதங்கள் குறித்து ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ஆகஸ்ட் 13ம் தேதி, கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் எழுந்துள்ள சூழல் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஒரு வாரம் கெடு?இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள், தங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில், இரண்டு லட்சம் கட்டடங்கள் விதிமீறல் கட்டடங்கள் என, பட்டியலிடப் பட்டுள்ளன.

இவ்வாறு, தங்களுக்கு தெரிந்த நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களின் முகவரிக்கு, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன.
அதில், ""உங்கள் கட்டடம், 2007ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதா? அதற்கான ஆதாரங்களை, ஒரு வாரத்துக்குள் சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் கட்டடத்தின் தற்போதைய நிலை, அதன் வரைபடம் போன்ற ஆவணங்களையும், இத்துடன் அனுப்ப வேண்டும்,'' என, குறிப்பிட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது.விதிமீறல் கட்டடங்கள் என பட்டியலிடப்பட்ட அனைத்து கட்டடங்களுக்கும், ஆரம்பகட்ட விவர சேகரிப்புக்காக, இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -
Last Updated on Friday, 27 July 2012 05:27