Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடசேரி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி               28.07.2012

வடசேரி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகர்கோவில், ஜூலை 27: நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

 நாகர்கோவில் மையப் பகுதியான வடசேரியில் கிறிஸ்டோபர் பஸ் நிலையமும், மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு பஸ் நிலையங்களும் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

 பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் நடைமேடைகளில் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் மட்டுமின்றி, நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம், நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் தெரிவித்து இருந்தனர்.

 இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 24 ஆம் தேதி நகராட்சி பெண் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் அங்கிருந்த கடை ஊழியர்கள் தடுத்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.

 இதற்கிடையில் வெள்ளிக்கிழமை காலை நகராட்சி வருவாய் அலுவலர் மாணிக்கரசி, நகரமைப்பு ஆய்வாளர்கள் கெபின்ராய், சந்தியா மற்றும் ஊழியர்கள் வடசேரி பஸ் நிலையத்திற்கு ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்றனர். அங்கு போலீஸôர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 பஸ் நிலையத்தின் மேற்குப் பகுதியில் 20 கடைகள் வாடகைக்கு விடபபட்டுள்ளன. இந்தக் கடை உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து கடையை விரிவுபடுத்திருந்தனர். இந்த விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் உள்ள கட்டுமானங்களை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர்.

 அதுபோல் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் 22 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் இரு ஹோட்டல்கள் ஆகும். இந்தக் கடைகளும் அனுமதிக்கப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே ஆக்கிரமித்து கட்டுமானங்களைக் கட்டி விரிவுப்படுத்தி இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

 ஒரு ஹோட்டலில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முற்பட்டபோது, கடை உரிமையாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த வழக்குரைஞர்கள் நகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாக அந்த கடை உரிமையாளர் தெரிவித்தார். அப்படியானால் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை காட்டும் படி அதிகாரிகள் கூறினார்.

 இதனால் வழக்குரைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது எனக் கூறி ஜே.சி.பி. இயந்திரத்தின் முன் போய் நின்றனர்.

 இதனால் சிறிது நேரம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. இதை கவனித்துக் கொண்டிருந்த பிற கடைக்காரர்கள், எங்கள் கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, இந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தயக்கம் காட்டுவதாகக்கூறி அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அந்த ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டிருந்த அதிகப்படியான ஆக்கிரமிப்பு பகுதியும் அகற்றப்பட்டது.

 கண்காணிப்பு தேவை

 பஸ் நிலையத்துக்குள் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுவது வழக்கம். சில நாள்கள் கழித்து அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது வாடிக்கையாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் இனி பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 பஸ் நிலையத்தின் தெற்குப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் உள்ள இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். இப்போது இரு சக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்படுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம்.