Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்                      06.08.2012

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணியை மேற்கொள்ள அசோக்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. 9 பெரிய வீடுகள் உட்பட அதிகமான குடிசை வீடுகள் ஜெ.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பக்கிள் ஓடை நான்காம் கட்ட பணிக்காக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் மதுமதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி உதவி பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஜினியர்கள் பிரின்ஸ், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அசோக்நகர் முதல் மடத்தூர் ரோடு வரை பக்கிள் ஓடை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜெ.சி.பி மூலம் மேற்கொள்ளப்பட்டன.

9 பெரிய வீடுகள், பல தற்காலிக குடிசை வீடுகள், காம்பவுண்ட் சுவர்கள் இடித்து தள்ளப்பட்டன. இது தவிர ராஜீவ்நகரில் ரோட்டை உடைத்து செப்டிக் டேங் அமைத்திருந்ததும் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டிருந்தது. ஆனால் பனிமய மாதா கோயில் திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனைவரும் சென்று விட்டதால் போலீஸ் பாதுகாப்பு எதுவும் இன்றி மாநகராட்சியினர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

எந்த ஒரு சிறிய வாக்குவாதம் கூட இல்லாத நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து முடிந்தது. அந்த பகுதி மக்கள் தாமாக முன்வந்து வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் எடுத்து கொள்வதற்கு அரை மணிநேரம் டைம் கேட்டனர். அந்த டைம் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர்கள் பொருட்களை அங்கிருந்து மாற்றினர். அதன் பின்னர் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.