Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகரில் ஆக்கிரப்பு அகற்றம்

Print PDF

தினமலர்     18.08.2012

திருச்சி மாநகரில் ஆக்கிரப்பு அகற்றம்

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் ஆக்ரமிப்புகளை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதை என்ன காரணத்தாலோ மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.குறிப்பாக சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் பயணிகளின் நடைபாதையை கூட, அங்கு வாடகைக்கு கடை பிடித்திருப்போர் ஆக்கிரமிப்பு, தங்களின் கடையை விரிவுபடுத்தியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளால் பயணிகள் தினமும் அவதிப்பட்டனர்.நேற்று காலை ஒன்பது மணிக்கு திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின், லாரிகள் சகிதம் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்டுக்கு வந்தனர்.

முதலில் பயணிகளின் நடைபாதையிலிருந்து ஆக்ரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அப்போது நடைபாதையிலிருந்து பொருட்களை பணியாளர்கள் லாரியில் ஏற்றினர்.அதற்கு கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆயினும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றுவதில் குறியாக இருந்து, அவற்றை அகற்றி விட்டனர்.இதனால் பஸ்ஸ்டாண்டில் வியாபாரிகள் தங்களின் கடைகளை நேற்று காலை சிறிது நேரம் அடைத்து வைத்திருந்தனர்.பின் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் உள்ளே அனுமதியின்றி போடப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.அதேபோல் கலையரங்கம் தியேட்டர் அருகே மெக்டெனால்டு ரோட்டில் உள்ள பெட்டிக்கடையினர் ஆக்ரமித்து வைத்திருந்த பொருட்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச் சென்றனர்.காந்தி மார்க்கெட், வெங்காய மண்டி ரோடு ஆகிய இடங்களிலும் சாலையோரங்களில் இருந்த ஆக்ரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

மாநகரில் நடந்த ஆக்ரமிப்பு அகற்றத்தை மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.வியாபாரிகள் குமுறல்: ஆக்ரமிப்புகளை திடீரென மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதால், வியாபாரிகளின் பொருட்கள் பலவற்றையும் அவர்கள் அள்ளிச் சென்றனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னரே மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்பு அகற்றம் குறித்து தெரிவித்திருந்தால், பொருட்களை நாங்களே எடுத்து வைத்திருப்போம் என்று அவர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

Last Updated on Saturday, 18 August 2012 06:16