Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 08.09.2009

ஆக்கிரமிப்பு அகற்றம்

பண்ருட்டி, செப். 7: பண்ருட்டியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிவிடுமாறு நகராட்சி நிர்வாகம் 2 முறை அறிவிப்பு விடுத்தும் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காததால் போலீஸôர் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

பண்ருட்டி நகரின் முக்கியச் சாலை மற்றும் கடை வீதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் பல விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இது குறித்து தினமணி நாளிதழில் ஆகஸ்ட் 1-ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.

இதனையடுத்து ஆகஸ்ட் 29-ம் தேதி ரத்தினம் பிள்ளை மார்கெட்டிலும், செப்டம்பர் 1-ம் தேதி காந்தி சாலையிலும் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நகராட்சி ஊழியர்கள் அறிவிப்பு விடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் ஒத்துழைக்காததால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பிச் சென்றனர்.

இதை தொடர்ந்து முறையான திட்டத்துடன் 3-வது முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகம், 3 நாள்களுக்கு முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சி.சக்கரபாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புடன், சுகாதார அலுவலர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு காந்தி சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் சென்னை-கும்பகோணம் சாலை, ரத்தினம் பிள்ளை மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக நகராட்சி ஊழியர்கள் கூறினர்