Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரேஸ்கோர்சில் இன்னொரு நடைபாதை தயாராகிறது

Print PDF
தினகரன்      04.09.2012

ரேஸ்கோர்சில் இன்னொரு நடைபாதை தயாராகிறது

கோவை, : கோவை ரேஸ்கோர்சில் வீட்டு முன்புறம் உள்ள சாலையோர பூங்கா அகற்றப்பட்டு, இன்னொரு நடைபாதை ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி நேற்று அளித்த பேட்டி:

கோவை மாநகரில் சிறப்பு தூய்மை பணி வார்டுதோறும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியின்போது அந்தந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பங்களாக்கள் முன்புறம் சாலையை ஆக்கிரமித்து வீட்டு காம்பவுண்ட் சுவரையொட்டி சிறிய அளவிலான பூங்காக்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இதனால், சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒருசில வீடுகளில் 25 முதல் 30 அடி வரை சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கண்டறிந்து ஆக்கிரமிப்பு பூங்காக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏற்கனவே ஒரு நடைபாதை உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமையாக முடிந்த பின்னர் இன்னொரு நடைபாதை ரவுண்டானா அமைக்கப்படும். அத்துடன், நடைபயிற்சிக்கு வருவோரின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த பார்க்கிங் வசதி செய்துகொடுக்கப்படும். இதற்கான வரைபடம் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இன்னும், ஒருசில வாரங்களில் இன்னொரு நடைபாதைக்கான பணிகள் துவங்கும்.

எல்இடி தெருவிளக்கு:

கோவை மாநகரில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில், சோடியம் மற்றும் டியூப் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், மின்சாரம் நிறைய வீணாகிறது. இதை மிச்சப்படுத்த எல்இடி விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசிடமிருந்து எல்இடி விளக்கு ஒதுக்கீடு வரவேண்டியுள்ளது. மிக விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். உத்தரவு வந்தவுடன் அனைத்து சோடியம் மற்றும் டியூப் லைட்கள் அகற்றப்பட்டு, ஒரே சீராக எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அடுத்தக்கட்டமாக விரிவுபடுத்தப்படும்.

‘ஸ்கை வாக்‘ பாலம்:

பிரதான சாலைகளை பாதசாரிகள் கடந்து செல்வதின் மூலமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கோவை அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் முன்புறம் ஆகிய நான்கு இடங்களில் ‘ஸ்கை வாக்‘ பாலம் அமைக்கப்பட உள்ளது. உக்கடத்தில் சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். இதற்கான ஆய்வுப்பணியை பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக இப்பணி நடக்கிறது. ஆய்வுப்பணி முடிவடைந்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கும். அத்துடன், டவுன்ஹால், உக்கடம், ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் ரோடு ஆகிய நான்கு இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணியும் ஒருசேர நடந்து வருகிறது.

சென்டர் மீடியன்:

புரூக்பாண்ட் ரோட்டில் சாலைவிபத்தை குறைக்க சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாரதிபார்க் ரோட்டில் வாகனங்கள் மீது உரசும் மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. நகரில் போக்குவரத்தை எளிதாக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கமிஷனர் பொன்னுசாமி கூறினார்.