Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 16.09.2009

கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை, செப். 15: மதுரை கீழமாரட் வீதியில் போக்குவரத்துக்கு இடையூராக பொதுமக்கள் செல்லும் பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை போலீஸôர் துணையோடு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

மதுரையில் தற்போது போக்குவரத்தைச் சீரமைக்க வாரம் ஒரு வீதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்தை சீராக்க ஒரு வழிப்பாதை, கண்காணிப்பு காமிரா உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கீழமாரட் வீதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தாற்காலிகக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலையில் அகற்றினர்.

இதை எதிர்த்து ஆக்கிரமிப்பு கடைகாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே போலீஸôர் குவிக்கப்பட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டோரிடம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயஸ்ரீ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் பேசினர். அதன்பின் மறியல் கைவிடப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்கள் சிந்திப்பார்களா?: கீழமாரட் வீதியானது மிக முக்கிய சாலையாகும். மீனாட்சி கோயில், கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் காமராஜர் சாலை பகுதிக்கு செல்வோர் என முக்கிய பகுதிகளை இணைப்பதாக கீழமாரட் வீதி உள்ளது.

இங்கு வெங்காய மண்டிகள் அதிகம் என்பதால் சாலையோரத்திலேயே வெங்காயம் குவிக்கப்படுகிறது. மேலும் லாரி ஷெட்டுகளும் உள்ளதால் நேரம் காலம் இல்லாமல் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.

இங்கு உள்ள மார்க்கெட்டில் உள்ள கடைகளைத் தவிர மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகளை விரித்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் கட்சியினர் துணைபோயினர். இதனால், மாநகராட்சி அனுமதியும் எளிதில் கிடைத்தது.

இதனால், சாலையை ஆக்கிரமித்து கடையை அமைத்தவர்கள் போக்குவரத்து நெரிசல் குறித்து கவலைப்படாத நிலை ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்குக் கூட வழி இல்லாத நிலையால் கீழமாரட் வீதியானது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது.

மக்களின் உண்மையான பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் இருப்பதாலேயே தற்போது ஆளும் கட்சியினர் கூட ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.

ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட கட்சிகள் ஆதரவு தந்து ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாக மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அகற்றப்பட்ட கடைக்காரர்களுக்கு மாற்று இடம் தந்து அவர்களது வருவாய் பாதிக்காதவகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Last Updated on Wednesday, 16 September 2009 11:04