Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க கோரிக்கை

Print PDF
தினமணி       04.04.2013

மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க கோரிக்கை


சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியாக தொடங்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

காலையில் உணவகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இட்லிகள் விற்றுத் தீர்ந்துவிடுவதால் பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே பகுதிவாரியாக மலிவு விலை உணவகங்களைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1,500 இட்லிகள்: அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1,500 இட்லிகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு இட்லி ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு இட்லிக்கான தயாரிப்புச் செலவு ரூ. 1.86 ஆகிறது என்று முதலவர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. தயிர் சாதம் ரூ. 3-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு நாள் ஊதியம் ரூ. 300: மலிவு விலை உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 300 ஊதியம் வழங்கப்படுகிறது. இப்போது ஓர் உணவகத்துக்கு 12 பேர் வரை பணிபுரிகிறார்கள்.  அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் உணவு மேஜை வசதி, தண்ணீர் வசதி ஆகியவை முழுமையாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. சில வார்டுகளில் தாற்காலிக இடங்களில் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு 10 நாள்களுக்குள் நிரந்தர கட்டடம் ஏற்பாடு செய்துத் தரப்படும். அந்த உணவகங்களிலும்கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒன்று என 15 மலிவு விலை உணவகங்களை பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி 24 உணவகங்களும், மார்ச் 6ஆம் தேதி 34 உணவகங்களும் திறக்கப்பட்டன. மீதமுள்ள 127 உணவகங்களை விடியோ கான்பரன்சிங் மூலம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல்வர் திறந்து வைத்தார்.