Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வருவாயை பெருக்க மாநகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள்: மண்டலக் குழு தலைவர்கள் யோசனை

Print PDF
தினமணி       04.04.2013

வருவாயை பெருக்க மாநகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள்:  மண்டலக் குழு தலைவர்கள் யோசனை

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வருவாயை பெருக்க வேண்டும் என்று வேலூர் மாநகராட்சியில் நடைபெற்ற குடிநீர் பிரச்னைகள் மற்றும் இவ்வாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர்கள் யோசனை தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் பா.கார்த்தியாயினி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் தேவக்குமார், மண்டலக் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"1-வது மண்டலத்தில் அடங்கிய காட்பாடி, தாராபடவேடு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பணிகளில் 75 சதவீதம் நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட வேண்டும். மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி வசூல் தரும் பகுதியாக மண்டலம் 1 இருப்பதால் அதற்குரிய வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

மண் சாலைகளை தரம் உயர்த்த வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் 1 பகுதிகள் வந்துள்ள நிலையில், பல தெருக்கள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை'' என்று 1-வது மண்டலக் குழுத் தலைவர் சுனில்குமார் தெரிவித்தார்.

"சத்துவாச்சாரி, வள்ளலார் அடங்கிய மண்டலம் 2 பகுதியில் ஆட்சியர் அலுவலகம் எதிரேயும், ஆவின் நிறுவனம் அருகேயும் உள்ள காலி இடங்களில் வணிக வளாகம் கட்ட வேண்டும். அலமேலுமங்காபுரம், மூலைகொல்லை பகுதிகளில் சாலைப் பணிகள் நிலுவையில் உள்ளன. புதிதாக மாநகராட்சி பகுதியில் சேர்க்கப்பட்ட 18 மற்றும் 19 வார்டுகளில் மின்விளக்கு, சாலை, கால்வாய் வசதி செய்துதர வேண்டும்'' என்று 2-வது மண்டலக் குழுத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் கேட்டுக் கொண்டார்.

"பழைய மாநகராட்சி கட்டடத்தை புதுப்பிப்பதோடு, அப்பகுதியில் வணிக வளாகம் கட்ட வேண்டும். பூந்தோட்டம் பூங்கா, சாஸ்திரி நகர் பூங்கா உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.

44-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மாந்தோப்புக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பலவன்சாத்து கப்பம் ஏரியை தூர்வார வேண்டும்'' என்று 3-வது மண்டலக் குழுத் தலைவர் குமார் கேட்டுக் கொண்டார்.

மேயர் பதில்

"மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். இவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்கு அரசின் சிறப்பு நிதியுதவியை பெறலாம். பிற பணிகளுக்கு பொது நிதியில் இருந்து செலவிடலாம்.

4 மண்டலங்களிலும் சுடுகாடு, அதன் அருகே காரிய மேடை அமைத்தல், பூந்தோட்ட அமைப்புடன் இப்பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் இடம் தேர்வு செய்தால், எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேயர் பா.கார்த்தியாயினி தெரிவித்தார்.

நியமனக்குழு தலைவர் சி.கே.சிவாஜி, கல்விக்குழு உறுப்பினர் சூரியாச்சாரி, மாமன்ற உறுப்பினர் அன்வர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.