Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனியில் ஆக்கிரமிப்புகள்: கோட்டாட்சியர் ஆலோசனை

Print PDF
தினமணி        06.04.2013

பழனியில் ஆக்கிரமிப்புகள்: கோட்டாட்சியர் ஆலோசனை


பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி கிரிவீதி, சன்னதி வீதி, பாளையம், பஸ் நிலையம், மார்க்கெட், ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

இதையடுத்து பங்குனி உத்திரத்துக்கு முன் அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி  உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனால் பல பகுதிகளில் பெரிய அளவில் சாலைகள் விசாலமானது.

ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர் சபை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்துக்கு  கொண்டு சென்றதன் விளைவாகவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதா என்று கோட்டாட்சியர் வேலுச்சாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதிகாரிகளுடன் தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினரும் பங்கேற்றனர்.  பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்  ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படும். பழனியில் உள்ள நீர்நிலைகள், சுற்றுப்புற சுகாதாரம் குறித்து அடுத்த கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்படும். பழனியில் போக்குவரத்து, வாகன வசூல் உரிமம், பேருந்து நிலையங்களில் பொருள்கள் அதிக விலைக்கு விற்றல், திருக்கோயில் அருகே உள்ள மூன்று மதுபானக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.  மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 730 ஏக்கர் தனியாரிடம் இருந்து திருக்கோயிலுக்கு பட்டாமாற்றம் செய்யப்பட்டும் இதுவரை 60 ஏக்கர் மட்டுமே அறநிலையத்துறை பெற்றுள்ளது.  மீதியை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பற்றி சுமார் 15 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாடு திருத்தொண்டர் சபை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது என்றார்.