Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடந்தை பேருந்து நிலையத்தில் 24 கடைகள் அகற்றம்

Print PDF
தினமணி        09.04.2013

குடந்தை பேருந்து நிலையத்தில் 24 கடைகள் அகற்றம்


கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த 24 பூ, பழக்கடைகளை நகராட்சியினர் திங்கள்கிழமை மாலை அகற்றினர்.

திமுக ஆட்சியில் இங்கு சுற்றுலா மேம்பாட்டு கழக வளர்ச்சி நிதியைக் கொண்டு 24 கடைகள் கட்டப்பட்டு, பழம், பூ வியாபாரம் நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாறிய பின் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி 24 கடைகளையும் அகற்ற வேண்டும் என நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 31.3.2012 வரை கடைகளுக்கான டெண்டர் முடிந்து, அதிலிருந்து தினசரி வசூல் தொகையாக ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 மட்டும் நகராட்சியால் வசூலிக்கப்பட்டது.

இந்த கடைகளை டெண்டர் எடுத்து நடத்தும் திமுகவினர் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த நவ. 20-ம் தேதி நகராட்சி அதிகாரிகள் கடைகளை இடிக்க வந்தபோது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கடைகளை இடிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்போது இடிக்கவில்லை.

பின்னர் உயர் நீதிமன்றத்தில் வியாபாரிகள் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இது தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

அதன்படி வியாபாரிகள் கும்பகோணம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். வியாபாரிகளும், நகராட்சி நிர்வாகமும் கலந்து பேசி சுமூக முடிவை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளும், ஆணையர் உள்ளிட்டோரும் பேசினர்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை  நகராட்சி அதிகாரிகள் 2 பொக்லீன் இயந்திரங்கள், புல்டோசர் இயந்திரத்துடன் வந்தனர். கால அவகாசம் வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் கடைகளை இடிக்கத் தொடங்கினர். தர்னா செய்த முயன்றவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.