Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விஸ்வரூபம்!விதிமீறிய கட்டடங்களின் சர்ச்சை மீண்டும்...பழைய பட்டியலை "தூசு தட்டும்' அதிகாரிகள்

Print PDF
தினமலர்        18.04.2013

விஸ்வரூபம்!விதிமீறிய கட்டடங்களின் சர்ச்சை மீண்டும்...பழைய பட்டியலை "தூசு தட்டும்' அதிகாரிகள்

ஊட்டி:நீலகிரியில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியல்; கோர்ட் வழக்குகளில் சிக்கியுள்ள குடியிருப்புகளின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட கட்டடங்கள் 1,000க்கணக்கில் உள்ளன.

மாவட்டத்தில், "மாஸ்டர் பிளான்' சட்டப்படி, அதிகபட்சமாக, 21 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடங்களை கட்டக் கூடாது என்றாலும், பல்வேறு வணிக வளாகங்கள் எவ்வித விதிகளையும் மதிக்காமல் கட்டப்பட்டுள்ளன.
இடிப்பு நடவடிக்கை

சில ஆண்டுகளுக்கு முன், ஐகோர்ட் உத்தரவின்படி, சில விதிகளை மீறிய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. சில அரசியல் கட்சியினர், "விஐபி' க்களின் தலையீட்டதால், பல இடங்களில் இடிப்பு நடவடிக்கை, வெறும் "கணக்கு' காண்பிக்கும் வகையில் மட்டுமே இருந்தன. தவிர, சில கட்டட உரிமையாளர்கள் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக, மேல் முறையீடு செய்ததால், அக்கட்டடங்கள், இடிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பித்தன. சில வழக்குகளும் நடந்து வருகிறது.

மீண்டும் விபரம் சேகரிப்பு

இந்நிலையில், சில காலம் அமைதியாக இருந்த, இந்த கட்டட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநில நகராட்சி நிர்வாக துறை செயலகம், "நீலகிரி உட்பட சில மலை பகுதிகளில், விதிமுறையை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், அவற்றின் மீது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துள்ள நடவடிக்கை, கோர்ட் வழக்கில் உள்ள கட்டடங்களின் பட்டியல்' உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் அனுப்புமாறு உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஊட்டியில் அதிகாரிகள் குழு

இப்பணியை மேற்கொள்ள, பிற நகராட்சிகளின் கமிஷனர்கள், அலுவலர்கள் அடங்கிய தனி குழு நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழுவினர், ஊட்டி நகராட்சியில், தங்கள் பணியை நேற்று துவக்கியுள்ளனர். நகரில் விதிமுறை, அனுமதி மீறிய கட்டடங்கள் குறித்த அனைத்து விபரங்கள்; கோர்ட் வழக்கில் உள்ள கட்டடங்களின் தற்போதைய நிலையை அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர்.

மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ள, கட்டட விவகாரம், விதிமீறிய கட்டட உரிமையாளர்கள், அதற்கு காரணமான அனைத்து தரப்பினரையும் "கிலி' அடைய செய்துள்ளது.

இதில், கோர்ட் தலையீடு உள்ளதால், அரசு அதிகாரிகளும் பாரபட்சமற்ற பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆட் பற்றாக்குறையால் தொடரும் மீறல்

ஊட்டி நகராட்சியை பொருத்தவரை 1,336 கட்டடங்கள் விதிமுறை மீறி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக பழைய பட்டியல் விபரத்தில் கூறப்படுகிறது. நகராட்சியில், புதிய கட்டடங்கள் கட்ட 2012ல் விண்ணப்பித்த பலருக்கு, பல மாதங்கள் கழித்து, கடந்த ஆண்டு தான், அனுமதி வழங்கப்பட்டது. கால தாமதத்தால், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், உள்ளூர் கட்சி "விஐபி' க்களின் உதவியுடன் பலரும் கட்டடம், வீடுகளை கட்டிக் கொண்டனர்.

"அனுமதி கிடைப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இத்தகைய கட்டுமானங்களில் விதிமீறல், ஆக்கிரமிப்புகள் உள்ளன' என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இத்தகைய கட்டடங்களை கண்காணித்து, ஆய்வு நடத்த, கட்டட ஆய்வாளர், கள ஆய்வாளர் உட்பட அலுவலர்கள் போதிய அளவில் இல்லை. இதே போன்ற நிலை தான் மாவட்டம் முழுவதும் நிலவுகிறது.

எனவே, மலை மாவட்டத்தின் தன்மைக்கேற்ப, நகரமைப்பு பிரிவுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான், விதிமீறும் கட்டடங்களுக்கு, வரும் நாட்களிலாவது "கடிவாளம்' போட முடியும்.