Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் கடைக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

Print PDF
தினத்தந்தி               26.04.2013

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் கடைக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் 13 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்  அதிரடியாக அகற்றினர். இதனை கண்டித்து கடைக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு கடைகள்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 56 நிரந்தர கடைகளும், அனுமதி வழங்கப்பட்ட 13 ஆவின் பாலகங்கள் உள்பட 35 கடைகளும் உள்ளன. இதைதவிர அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளது. இது பற்றி தொடர்ந்து வந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வந்தனர்.

இதற்கிடையே, 6 மாதத்திற்கு முன்பு புதிய பஸ்நிலையத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுதிமொழி குழுவினர், ஆவின் பாலகங்கள் என்று இருந்த 13 கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றும், குளிர்பானங்கள் போன்ற இதர பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது எனக்கூறி 13 ஆவின் பாலகங்களை அகற்றுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் மகரபூஷணம் அறிவுறுத்தினார்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்


அதன்பேரில் கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ளோம் என்றும் கடைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்போது கடைகள் ஏதும் அகற்றப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், சூரமங்கலம் உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலையில் சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது கடைகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடைக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் ஐகோர்ட்டு உத்தரவுப்படியும், ஆவின் நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்துள்ளோம் என்றும் அதிகாரிகள் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட 13 ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது. மேலும், பஸ்நிலையம் வெளிப்புறத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 9 பழக்கடைகளும் அகற்றப்பட்டது.

ஆவின் பொருட்களை விற்பனை செய்யவில்லை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 13 கடைகளை அகற்றுவதற்கு சென்னை ஐகோர்ட்டு, ஆவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சியை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆவின் நிர்வாகமோ அந்த 13 கடைகளுக்கும் நாங்கள் முன்னரே அனுமதி ரத்து செய்துவிட்டோம். எங்களது ஆவின் நிர்வாகத்தின் பொருட்களை விற்பனை செய்யாத காரணத்தினால் கடைகளை அகற்றிக்கொள்ளலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் வந்துள்ளது. அதன்படிதான் ஆவின் பாலகங்களை அகற்றுகிறோம் என்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்ததால் சூரமங்கலம் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.