Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியில்லாத விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்

Print PDF

தினமணி 27.11.2009

அனுமதியில்லாத விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்

கரூர், நவ. 26: கரூர் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கரூர் நகராட்சிக் கூட்டம் நகர்மன்ற பெத்தாச்சி மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பி. கனகராஜ், ஆணையர் (பொ) சி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், போக்குவரத்து மேலாண்மைக் குழு திட்டத்தின் கீழ் சாலைகள், மழைநீர்வடிகால் மற்றும் போக்குவரத்தை சீரமைக்க ரூ. 57.25 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது, கரூர் நகரில் எந்தெந்தப் பகுதிகளில் சாலையோரத்தில் வியாபாரம் நடத்த அனுமதிப்பது, நகராட்சியில் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு அனுமதியளிப்பது, வாங்கல் சாலையிலுள்ள நகராட்சி கலவை உரக்கிடங்கில் உருவாகும் ஈயை கட்டுப்படுத்த ரூ.73 ஆயிரத்தில் மருந்து மற்றும் கருவிகள் வாங்குவதற்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, அவசரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 36 வார்டுகளிலும் ரூ.4.50 லட்சத்தில் தார்ச் சாலைகளை செப்பனிடுவது, ரூ.18.50 லட்சத்தில் கலவை உரக்கிடங்கில் கான்கிரீட் தளம் அமைப்து, ரூ.25 லட்சத்தில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருமாநிலையூரில் சமுதாயக் கூடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் நகராட்சிப் பகுதிகளில் குறுகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று நகர்மன்ற உறுப்பினர்கள் இரா. பிரபு, வே. கதிரவன், ராஜகோபால் ஆகியோர் குற்றம் சாட்டினர். நகராட்சியில் முறையான அனுமதியில்லாமல் சாலை தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இதனால், நகராட்சிக்கு எந்த வருமானமும் இல்லை. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இக்கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் சிவகாமி சுந்தரி கூறினார். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் என். மணிராஜ், சங்கர், கி. வடிவேல், . முத்துச்சாமி, வெங்கடேஷ், சுப்பன், ராஜலிங்கம், ராஜேஸ்வரி, நல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.