Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த 30 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 17.12.2009

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த 30 கடைகளுக்கு சீல்

மதுரை, டிச. 16: மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்த பஸ் நிலையத்தில் உள்ள 30 கடைகள், கடந்த 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நிலையில் இருந்துவந்தன. இதனால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தக் கடைகளை நடத்தியவர்கள் பாதியிலேயே விட்டுச் சென்றதால், மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் வராத நிலையில், கடைகளை மாநகராட்சியே சீரமைத்து மீண்டும் ஏலத்துக்கு விட முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 30 கடைகளும் மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கடைகளை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன், உதவிப் பொறியாளர் முருகன், சந்தைக் கண்காணிப்பாளர் ரங்கராஜன் மற்றும் பணியாளர்கள், புதன்கிழமை அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30 கடைகளையும் மீட்டு, அவற்றைப் பூட்டி சீல் வைத்தனர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:41