Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு: கட்டணம் செலுத்த பள்ளிக்கு உத்தரவு

Print PDF

தினமலர் 11.01.2010

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு: கட்டணம் செலுத்த பள்ளிக்கு உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சியில் "ரிசர்வ் சைட்' இடத்தை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும், என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் பீளமேடு - ஆவராம்பாளையம் ரோட்டில் சாந்தி நகர் உள்ளது. கடந்த 1965ல் நகர ஊரமைப்பு துறையின் அங்கீகாரத்துடன் 5.30 ஏக்கர் பரப்பில் "லே - அவுட்' அமைக்கப்பட்டது; மொத்தம் 55 மனையிடங்கள் விற்கப்பட்டன.

பொது ஒதுக்கீட்டு இடம் (ரிசர்வ் சைட்) 4 இடங்களில் பிரித்து ஒதுக்கப்பட்டது. அதில், ஓரிடத்தில் 13 சென்ட் பரப்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடம் இருந்தது. "லே-அவுட்' உருவாக்கப்பட்டபோது இந்த பகுதி முழுவதும் பீளமேடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. கடந்த 1981ல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தபோது, இந்த பொது ஒதுக்கீட்டு இடங்கள் எதுவும் முறைப்படி ஒப்படைக்கப்படவில்லை. இதனால், இந்த இடங்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டன. குழந்தைகள் விளையாட்டு மைதான இடத்தில் பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்தப்பட்டது. பொதுமக்கள் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. அதையொட்டிய இடத்தை, அருகில் 17வது வார்டிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு பின் புறப்பாதையாக மாற்றிக் கொண்டது. இந்த இடங்களை மீட்க, அப்பகுதி மக்கள் போராடினர். பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளிக்கு, 17வது வார்டு பகுதியில் முக்கிய நுழைவாயில் இருந்தும், இந்த பாதையையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு முதன்மை முன்சீப் கோர்ட்டை பள்ளி நிர்வாகம் அணுகியது. அதை "பொது வழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று முன்சீப் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து, "சாந்தி நகர் குடியிருப்போர் சங்கம்" சார்பில், அதன் தலைவர் கஸ்தூரி சாமி, முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கின் முடிவில், "அது மக்கள் பயன்பாட்டுக்குரிய இடம்தான்' என்று 2006 அக்டோபர் 12ல் தீர்ப்பானது. அந்த இடத்தை பாதையாக மாற்றக்கூடாது என்றும், கோர்ட் அறிவுறுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2007ல் சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில், கடந்த 19ம் தேதியன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி பானுமதி வழங்கிய இந்த தீர்ப்பில், "பள்ளி நிர்வாகம், இந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அதே நேரத்தில், குழந்தைகள் 2 கி.மீ., சுற்றி வருவதை தவிர்க்க, இந்த இடத்தில் 4 அடிக்கு மட்டும் பாதையாக பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

வாகனங்கள் செல்லவோ, வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட், அந்த பாதையைப் பயன் படுத்த, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை குழந்தைகள் விளையாட்டு மைதானத்தை பராமரிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் தெளிவு படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, சாந்தி நகரில் உள்ள பொது மக்களை பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதோடு, "ரிசர்வ் சைட்' தொடர்பான வழக்குகளுக்கு முன் மாதிரியாகவும் உள்ளது. ஆனால், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமலே உள்ளது. பதினைந்து ஆண்டுகளாக கருப்பண்ணன் என்பவர் ஆக்கிரமித்து இருந்த இந்த இடம், கடந்த ஆண்டு ஜனவரியில் தான் மீட்கப்பட்டது. அங்கிருந்த கட்டடம் இடிக்கப்பட்டு, ஓராண்டாகியும் அந்த இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக, வார்டு கவுன்சிலர் சந்திரசேகரும் குரல் கொடுப்பதாக தெரியவில்லை. ரிசர்வ் சைட் இடங்களை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்தால் நல்லது.

பூங்கா அமையுமா?: இங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்திருந்த கட்டடத்தை, கடந்த ஆண்டு ஜன.,31ல் மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. ஆனால், இன்று வரை அந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை. ஆளும்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் லட்ச லட்சமாய் செலவழித்து, புதிது புதிதாக பூங்கா அமைக்கப்படுகிறது; .தி.மு.., கவுன்சிலர் வார்டு என்ற ஒரே காரணத்துக்காக இந்த பகுதியில் ஒரு பூங்காவை கூட மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என இங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Last Updated on Monday, 11 January 2010 11:30