Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி இடத்தில் உள்ள தனியார் மதுக்கடை பாரை அகற்றக் கோரும் மனு: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Print PDF

தினமணி 09.01.2010

மாநகராட்சி இடத்தில் உள்ள தனியார் மதுக்கடை பாரை அகற்றக் கோரும் மனு: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜன.18: மதுரை குருவிக்காரன் சாலையோரம் மாநகராட்சி இடத்தில் நடக்கும் தனியார் மதுக் கடை பாரை அகற்றி இடத்தைக் கையகப்படுத்தக் கோரிய மனுவுக்கு மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

குருவிக்காரன் சாலை பாலத்தின் அருகே மாநகராட்சி ஆணையர் பெயரில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் கட்டடம் கட்டி மதுபான பார் நடத்தி வருகின்றனர். மேலும் காலி இடத்தில் மணல், செங்கல் வியாபாரம் நடைபெறுகிறது.

இந்த நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ததில், இந்த இடம் மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமானது என நகரமைப்புத் திட்ட தலைமை அதிகாரி பதில் அளித்துள்ளார்.

பார் நடைபெறுவது குறித்தும், அதை மாநகராட்சி கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர், ஆட்சியர், தலைமைச் செயலர் ஆகியோருக்குப் பல மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த இடத்தில் மதுபானக் கடை மற்றும் பார் உள்ளதால் ரெüடிகள் தொந்தரவு, வழிப்பறிச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே, இந்த பாரை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது குறித்து மாநகராட்சி ஆணையர், டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர், ஆட்சியர் ஆகியோர் பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்

Last Updated on Tuesday, 19 January 2010 11:18