Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஸ் ஸ்டாண்டில் காலியான ஆக்கிரமிப்புகளால் நிம்மதி! உக்கடத்தில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 16.02.2010

பஸ் ஸ்டாண்டில் காலியான ஆக்கிரமிப்புகளால் நிம்மதி! உக்கடத்தில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை : உக்கடம் பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 21 கடைகளை மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் நேற்று அப்புறப்படுத்தினர்.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான உக்கடம் பஸ்ஸ்டாண்டு "பி' கிரேடில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். "பி கிரேடு' அந்தஸ்திலுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு கழிப்பிடம், குடிநீர், சுகாதாரம், பயணிகள் அமர போதுமான இருக்கை என பல வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தாலும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர் குழாய் உடைப்பு, தொலைக்காட்சி பழுது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்தாமல் தவிர்ப்பது உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தது. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டது.

கவுன்சிலர் , மேயர், துணைமேயர், சுகாதாரக்குழு தலைவர் சிபாரிசு என்ற பெயரில் உக்கடம் பஸ் ஸ்டாண்டின் உள் பகுதியில் ஒன்று இரண்டு என்று துவங்கி 21 கடைகள் முளைத்து விட்டன. பஜ்ஜி, போண்டா, பெட்டி, செல்போன், எஸ்.டி.டி., சி.டி., என கடைகள் முளைத்தன. ஏற்பட்ட வியாபார போட்டியால், பயணிகள் பொருட்களை வாங்கி செல்லவும், டீ, காபி, குளிர்பானங்களை சாப்பிட சொல்லி வற்புறுத்துவதும் தொடர்ந்தது. இது தொடர்பாக அடிக்கடி உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார்கள் சென்றன.கைகலப்பு, தகராறுகளும் அரங்கேறின. உக்கடம் போலீசிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடைகளை அகற்ற பரிந்துரை கடிதம் அனுப்பினர். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கடைகளை அப்புறப்படுத்திக்கொள்ள நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், யாரும் கடையை காலிசெய்ய முன்வரவில்லை. மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் நேற்று உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 21 கடைகளை அப்புறப்படுத்தினர். கடை நடத்த மாநகராட்சி அனுமதி பெற்ற இரு தொலைபேசி மையங்கள், டேன் டீ, பனைவாரியம், ஆவின், பி.எஸ்.என்.எல்., ஆகிய ஆறு கடைகளும், கோர்ட்டிலிருந்து இடைக்கால தடை பெற்றிருந்த மூன்று கடைகள் தவிர அனைத்து கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. "பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் உக்கடம் பஸ் ஸ்டாண்டிற்குள் யாரும் கடை வைக்கக்கூடாது' என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Tuesday, 16 February 2010 02:20