Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனத்தில் விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி 19.03.2010

திண்டிவனத்தில் விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு

திண்டிவனம், மார்ச் 18: திண்டிவனம் நகரில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விளம்பர பேனர்களை மூன்று நாள்களுக்குள் அகற்றவேண்டும் என விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

÷திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் மற்றும் பங்க் கடைகளில் ஆய்வுசெய்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையில் வந்த பணியாளர்கள் பேனர்களை அப்புறப்படுத்தினர்.

÷இதையடுத்து கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: புகையிலை தடுப்புச் சட்டத்தின்படி பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் இதுவரை இச் சட்டத்தை மீறிய 5000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் நான்கரை லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

÷புகையிலை குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

÷புகையிலை பலகைகள் வைத்தால் அதன் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடைகளில் வைத்திருப்பவருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதமும், 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

÷பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் 100 மீட்டர் தொலைவுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும்.

÷விழுப்புரம் மாவட்டத்தை புகையில்லா மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

 

Last Updated on Friday, 19 March 2010 10:54