Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடீர் குப்பம் குடிசைகள் அகற்றம்

Print PDF

தினமலர் 05.05.2010

திடீர் குப்பம் குடிசைகள் அகற்றம்

சேலம்: சேலம் ஜான்சன்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் உள்ள குடிசைகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் தவிர்க்க அங்கு போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

சேலம் மாநகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்டது ஜான்சன்பேட்டை திடீர் குப்பம். 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தோர் அங்கு வசித்து வந்தனர். அந்த பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதேவேளையில் குப்பத்தில் இருந்து வெளியேற மாட்டோம் என அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், உயர் நீதிமன்றம் குடிசைகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடிசைகளை அகற்ற சென்றபோது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே இடத்தை காலி செய்வோம்' என, மக்கள் கூறினர். அதிகாரிகள், 'உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்துள்ளோம். அந்த பகுதி புறம்போக்கு நிலம் அல்ல. மாநகராட்சி எல்லைக்குள் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க முடியாது. குடிசை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, உறுதியாக கூறினர்.

நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த 187 குடிசைகள் அகற்றப்பட்டன. போலீஸ் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.ஆர்.டி.., குழந்தைவேலு, தாசில்தார் சித்ரா, ஆதிதிராவிட நல அலுவலர் சின்னசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ரோட்டில் வைத்தபடி, என்ன செய்வதென தெரியாமல் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தனர்.

'ஜான்சன்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் கட்டப்படும் வீடுகளில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

Last Updated on Monday, 05 April 2010 06:38