Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இத... இத... இதத் தான் எதிர்பார்த்தாங்க...! ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம் : பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு

Print PDF

தினமலர் 08.04.2010

இத... இத... இதத் தான் எதிர்பார்த்தாங்க...! ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம் : பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு

கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றப்பட்டன; பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.கோத்தகிரி மார்க்கெட் பகுதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைந்திருந்தன. கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சுப்ரியா சாஹூவின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. ஆனால், சில நாட்களுக்குள் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு முளைத்தன; மார்க்கெட் சாலையின் அகலம் வெகுவாக குறைந்து, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து பேரூராட்சிகளின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், மார்க்கெட் சாலையை சீரமைக்க 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மார்க்கெட் நுழைவு வாயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சாலையும், சாலையோர நடைபாதை, பாதாள சாக்கடை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து பணிகள் துவங்கப்பட்டன.

பணிக்கு, ஆக்கிரமிப்பு தடையாக இருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் சில அகற்றப்பட்டன. கட்டடங்களுக்கு சேதம் இல்லாமல், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றப் போவதாக முன்வந்த கட்டட உரிமையாளர்கள், ஒரு நாள் அவகாசம் கேட்டதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது; இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஒரு சில கடைகளில் மட்டுமே முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம், பெரும்பாலான ஆக்கிரமிப்பை அகற்றாமல் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டினால், பேரூராட்சி நிர்வாகம் மீது வழக்கு தொடரப் போவதாக, தன்னார்வ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. வியாபாரிகள் தரப்பில் கேட்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்துரை மற்றும் அளவையர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் மார்க்கெட் சாலையின் இருபுறம் இருந்த ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றப்பட்டன.

கோத்தகிரி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் எஸ்..,க்கள் ரவிசந்திரன், சிவகாமி உட்பட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 'ஓரிரு நாட்களுக்குள் மார்க்கெட் சாலையோர ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால், தற்போது மார்க்கெட் சாலையின் அகலம் 8 முதல் 10 அடி வரை அதிகரித்துள்ளது; பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை மக்கள் வரவேற்று, பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தை முறையாக அணுகி, இடையூறாக இருக்கும் 54 நடைபாதை கடைகளை விரைவில் அகற்றுவதுடன், வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்படியும் வழி இருக்கே...: கோத்தகிரி மார்க்கெட் ஒட்டி அமைந்துள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு இருப்பின் அகற்றி, நடைபாதை கடைகள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில், இவ்விடத்தில், பேரூராட்சி மூலம் நிரந்தர கடைகள் அமைத்து வழங்கினால், வியாபாரிகளுக்கு நலன் ஏற்படுவதுடன், சாலையின் அகலம் விரிவாகும்; குறிப்பிட்ட இடத்தில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில் பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்ற முடியும். ஆக்கிரமிப்பை அகற்றி மக்களின் பாராட்டை பெற்றுள்ள பேரூராட்சி நிர்வாகம், இப்பிரச்னையையும் சாதுரியமாக கையாண்டு உடனுக்குடன் தீர்வு கிடைக்க செய்தால், பாராட்டு கூடும் என்பதில் சந்தேகமில்லை.

மின் கம்பங்களால் ஆபத்து: ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சாலை தற்போது விரிவடைந்துள்ளது. அதே நேரம், துருப்பிடித்து விழும் நிலையில் இருக்கும் மின் கம்பங்களையும் மாற்றி, பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் ஏற்றவாறு நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

Last Updated on Thursday, 08 April 2010 06:52