Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சித்தாபுதூர் பகுதியில் நிலம் ஆக்கிரமிப்புமீட்டுத்தர முயலுமா மாநகராட்சி?

Print PDF

தினமலர் 15.04.2010

சித்தாபுதூர் பகுதியில் நிலம் ஆக்கிரமிப்புமீட்டுத்தர முயலுமா மாநகராட்சி?

கோவை :கோவை சித்தாபுதூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இப்பகுதி மக்கள் பிரதான ரோட்டை அடைய வழி இல்லாமல் தினமும் படாதபாடுபட்டு வருகின்றனர்.மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தாபுதூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட, தற்போது வீடுகளும் தொழில் நிறுவனங்களும் பெருகி விட்டன. இவற்றில் சில, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.முன்னர் இப்பகுதி மக்கள் சத்தி ரோட்டுக்கு செல்ல தனி ரோடு வசதி இருந்தது. ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் இந்த ரோடு சிறுக, சிறுக மூடப்பட்டு விட்டது. சைக்கிள் கூட செல்ல முடியாத அளவுக்கு இந்த பாதை குறுகி விட்டது. சத்தி ரோடு செல்ல இப்பகுதி மக்கள் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ரோடு , திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டு, கிராஸ்கட் ரோடு சிக்னலை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.காலை, மாலை நேரங்களில் இந்த ரோடுகளில் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் பின்புறம் வழியாக செல்லும் ரோடு வழியாக ஜி.பி. சிக்னலை கடப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. நடைபாதை வசதி இல்லாததால், நடந்து செல்பவர்களால் எளிதில் இப்பகுதியை கடக்க முடியாது.சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வழியாக பொதுமக்கள் எளிதாக சத்தி ரோட்டை அடைந்தனர். ஐயப்பன் கோவில் பின்புற ரோடு வாகன நெரிசல் இல்லாமல் இருந்தது.

தற்போது ஆக்கிரமிப்புகளால் இந்த வழிகள் முழுமையாக அடைக்கப்பட்டு 'முட்டுச் சந்து' ஆகி விட்டது; அவசர காலங்களில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், சாலை நெருக்கடியால் படாதபாடு படுகின்றனர். பொதுமக்களின் உபயோகத்துக்கு சொந்தமான மாநகராட்சி நிலத்தை யார், எத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருந்தாலும் அத்தனையையும் அதிரடியாக அகற்றி சாதனை புரிந்து வரும் மாநகராட்சி நிர்வாகம், சித்தாபுதூர் பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் அக்கிரமங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது, புரியாத புதிராக உள்ளதாக இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, ''ஆக்கிரமிப்பு பற்றிய புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் விரைவில் சர்வே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வே ஆவணங்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Thursday, 15 April 2010 07:37