Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியார் பேருந்து நிலையத்திலுள்ள நடைபாதைக் கடைகளை மக்களுக்கு இடையூறின்றி மாற்றியமைக்க முடிவு

Print PDF

தினமணி 23.07.2009

பெரியார் பேருந்து நிலையத்திலுள்ள நடைபாதைக் கடைகளை மக்களுக்கு இடையூறின்றி மாற்றியமைக்க முடிவு

மதுரை, ஜூலை 22: பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அனுமதிபெற்ற நடைபாதைக் கடைகளை மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்றி அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக பெரியார் பேருந்துநிலைய பாலத்தை ஒட்டியுள்ள இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதைக் கடைகளால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றவும், அனுமதிபெற்ற நடைபாதைக் கடைகளை பெரியார் பேருந்துநிலைய பாலத்தின்கீழ் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடைகள் 8-க்கு 6 என்ற அளவில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 நாள்களுக்குள் கடையின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை அமைத்துக் கொள்ளவேண்டும்.

பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இப்பேருந்து நிலையத்துக்கும் வணிக வளாகப் பேருந்துநிலையத்துக்கும் இடையிலான நடைபாலம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய விளக்குகளுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கழிப்பறைகளில் கட்டணக் கழிப்பறைகளில் முறையாக வசூல் செய்யவும், பொது கழிப்பறைகளை நன்கு சுத்தம் செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேருந்து நிலையத்தின் சுகாதாரப் பணிகள் கண்காணிக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் விரிவுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றார் ஆணையர்.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் க.சக்திவேல், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், நிர்வாகப் பொறியாளர் மோகன்தாஸ், உதவி ஆணையர் (தெற்கு) தேவதாஸ், உதவி ஆணையர் (வருவாய்) ராஜகாந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி, சந்தை கண்காணிப்பாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாதையில் தேங்கிய சிறுநீர்: பெரியார் பேருந்து நிலையத்தில் ஆணையர் ஆய்வு செய்ய வருவதையொட்டி, அவசரகதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தூய்மைப் பணிகள் முடிவுறும் முன்னரே ஆணையர் வந்துவிட்டதால், பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் சிறுநீர் வழிந்தோடியதைக் காணமுடிந்தது.