Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Print PDF

தினமணி 23.04.2010

சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சிவகாசி, ஏப். 22: சிவகாசி நகராட்சியில் சாலை ஓர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நகராட்சி, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் உள்ள அனைத்துக் கடை வீதிகளிலும், தெற்கு ரதவீதிகளிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது ஒருவழிப் பாதையாக இருந்தும் பொதுமக்கள் அதனைக் கடைபிடிப்பதில்லை.

மேல ரதவீதியில் இரவு நேரக் கடைகள் சாலை ஓரங்களில் வைக்கப்படுகிறது.விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயில் முன்பு இரு சக்கர வாகனம் மட்டுமே நிறுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் நடக்க கூடமுடியாதபடி நடைபாதை கடைகளும், தள்ளுவண்டிக் கடைகளும் உள்ளன.

கோயில் முன்பு உள்ள அனைத்துக் கடைகளிலும் சாலையில் இரண்டு முதல் ஆறு அடி வரை பொருள்களை கடைக்கு வெளியே வைக்கிறார்கள். அருகில் உள்ள டானா பஜாரில் கடைக்காரர்கள் கடையை விட்டு வெளியே பொருள்களை வைக்கக் கூடாது என உத்தரவு உள்ளது. எனினும் அனைத்து கடைகளிலும் பொருள்கள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் நடைபாதைக் கடைகளும் உள்ளன.

புது ரோட்டுத் தெருவிலுள்ள அனைத்துக் கடைகளிலும் பொருள்களை நடைபாதையில் தான் வைத்துள்ளனர். என்.ஆர்.கே.ஆர். தெருவில் பல கடைக்காரர்கள் சரக்குப் பண்டல்களை நடைபாதையில் வைத்திருக்கிறார்கள்.

சிற்றுண்டி விடுதி நடத்துவர்களும் டீக்கடை நடத்துபவர்களும் நடைபாதையில் தான் வடை சுடும் பணியைச் செம்மையாகச் செய்கிறார்கள். பஸ்நிலையம் அருகே பயணிகள் நடக்கும் இடங்களில் பர்னிச்சர் வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற காரணங்களால் சிவகாசியில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு பெரிதும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு போதிய அளவில் போக்குவரத்து போலீஸôர் கிடையாது.

பொதுமக்களிடமும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்நிலையில் தெருவோர வியாபாரிகளுக்கும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புக்கள் உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சாலை ஓர ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.