Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1,500 கோடி மதிப்புள்ள 52 ஏக்கர் நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 26.04.2010

1,500 கோடி மதிப்புள்ள 52 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை : 'சென்னை மாநகராட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான 52 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளது' என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப்பணிகள் மீஞ்சூரிலும், நெம் மேலியிலும் நடந்து வருகின்றன. மீஞ்சூர் திட்டம் வரும் ஜூன் மாதக் கடைசியில் முடிக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படும். நெம்மேலி திட்டத்துக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வரும் 2011 டிசம்பருக்குள் இத்திட்டம் முடிக்கப்படும்.இதன்மூலம், சென்னைக்கு எவ்வளவு மோசமான வறட்சி நிலை ஏற்பட்டாலும், இரண்டு திட்டங்கள் மூலம் தினமும் 200 மில்லியன் கன அடி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப் படும். அடையாறு பூங்கா 358 ஏக்கரில் நூறு கோடி ரூபாயில் அமைக்கும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டமாக அடையாறு பூங்காவில் 58 ஏக்கரில் பணிகள் சிறப் பாக நடந்து வருகின்றன. இதுவரை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. நீர்நிலை, நில அபிவிருத்தி, நடைபாதை போன்ற பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. தற்போது பலவிதமான பறவைகள் இங்கு வரத் துவங்கியுள்ளன. 200க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பூங்காவை வரும் ஜன., 14ம் தேதி தை முதல் நாளன்று, முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். சென்னை மாநகராட்சி, ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரும் சாதனை படைத் துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 52 ஏக்கர் நிலத்தை, தனியாரிடம் இருந்து மாநகராட்சி மீட்டுள்ளது. இதன் மதிப்பு 1,500 கோடி ரூபாய்.

பெரம்பூர் உட்பட 10 மேம்பாலங் கள் கட்ட, சென்னை மேயராக நான் இருந்த போது அடிக்கல் நாட்டப் பட்டது. மண் ஆய்வு, தொழில்நுட்ப நிலையில் பெரம்பூர் பாலத்துக்கு மட்டும் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் இப்பாலம் பற்றி என்ன செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், வடிவமைப்பை மாற்றி, அண்ணா பல்கலையில் ஆய்வு அறிக்கை பெற்று, புதிதாக டெண்டர் விடப் பட்டு, பெரம்பூர் மேம்பாலப் பணிகள் துவங்கின. கட்டவே முடியாது, சாத்தியமில்லை என்று கூறியதை சவாலாக ஏற்று, பணிகளை நிறைவேற்றி, கடந்த மாதம் முதல்வர் இப்பாலத்தை திறந்து வைத்தார்.எந்த பாலத்துக்காக முதல்வர் கருணாநிதியை கைது செய்து, கொடுமைப்படுத்தினார்களோ, அதே பாலத்தை அவரே முதல்வராக வந்து, கட்டி முடித்து திறந்து வைத்துள்ளார். இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.

 

Last Updated on Tuesday, 27 April 2010 06:06