Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமணி 30.04.2010

டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

போடி, ஏப். 29: போடி நகரில் போக்குவரத்து, வர்த்தகர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றி, பறிமுதல் செய்தனர்.

போடி நகரில் தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பள்ளிகள், தனியார் அமைப்புகள் போன்றவற்றின் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றினால் போக்குவரத்துக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது.

இவற்றை அகற்ற பொதுமக்களும், போடி வர்த்தகர் சங்கத்தினரும் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில், வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போடி நகரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றி, பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் தெரிவித்தபோது, டிஜிட்டல் பேனர்களை போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் வைக்கவும், அனுமதி பெற்று வைக்கவும் நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சி குறிப்பிடும் இடத்தில் மட்டும், நிகழ்ச்சி நடக்கும் தேதிக்கு 2 நாட்கள் முன் வைத்துவிட்டு நிகழ்ச்சி நடந்த மறுநாளே பேனர்களை அகற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.