Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர்     22.12.2010

மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்

மேடவாக்கம்:மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் 21 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என, பொதுபணித்துறை சார்பில் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.அவ்வாறு, கட்டடங்களை அகற்றாத பட்சத்தில் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.மேடவாக்கம் பெரிய ஏரி 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீர் மூலம் விவசாயம் பார்க்கப்பட்டது.

அப்போது, ஊர் பொதுமக்களே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.சென்னை புறநகர் வளர்ச்சியடைய ஆரம்பித்த பின், விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பின், ஏரியும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதையடுத்து, ஏரி பராமரிப்பு என்பது அரிதாகிப்போனது. இருப்பினும், அந்த ஏரி நீர் மேடவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரை பாதுகாத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியின் ஒரு பக்க கரையை உடைத்து, உள்ளே நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள், ஏரி இடங்களை கூறு போட்டு சொற்ப விலைக்கு பலரிடம் விற்பனை செய்துள்ளனர்.இந்த வகையில் 15 ஏக்கருக்கும் அதிகமான ஏரி இடம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.நீலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து "தினமலர் ' அவ்வப்போது படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டு வருகிறது. அதன் நடவடிக்கையாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.சில மாதங்களில் அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்றது. இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் ஏரியின் ஒரு சில பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.அதில், நோட்டீஸ் அளித்த 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

 

வேளச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 2.25 கோடி நிலம் மீட்பு

Print PDF
தினகரன்      17.12.2010

வேளச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 2.25 கோடி நிலம் மீட்பு

சென்னை, டிச.17: வேளச்சேரி, 153வது வார்டு வி.ஜி.பி. செல்வாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,800 சதுர அடி கொண்ட சாலையோர நிலமும், 3,600 சதுர அடி கொண்ட பூங்கா நிலமும் இருந்தது. இதை எஸ். சங்கரி, ஏ.வி. சண்முகம், மு. வரதராஜ், ம. கோட்டைசாமி, கி. சுப்பிரமணி, கே. கோமளா, மு. ராமசாமி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து வேறு ஒரு சொத்து சம்பந்தப்பட்ட பத்திர பதிவு எண்ணை பயன்படுத்தி போலி பத்திரம் தயார் செய்து, பிற நபர்களுக்கு விற்பனை செய்தது விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து 5,400 சதுர அடி நிலமும் உடனடியாக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி.

போலி பத்திரம் தயார் செய்து மாநகராட்சி நிலத்தை விற்பனை செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி வேளச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

திருவொற்றியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்      16.12.2010

திருவொற்றியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவொற்றியூர், டிச.16: திருவொற்றியூர் காலடிப்பேட்டை சன்னதி தெருவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் கூரைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் சாலை குறுகலானது. நடந்துசெல்பவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். அந்த கடைகளை அகற்றும்படி ஆணையர் கலைச்செல்வன் உத்தரவிட்டார்.

அதன்படி, நகரமைப்பு அலுவலர் டேனியல் தலைமையில் ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செந்தில்குமார் ஆகியோர், ஊழியர்களுடன் அங்கு நேற்று சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில், ‘நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 


Page 41 of 204