Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ரூ100 கோடி நிலம் விடுவிப்பு

Print PDF

தினகரன்            25.11.2010

ரூ100 கோடி நிலம் விடுவிப்பு

பெங்களூர், நவ. 25: பெங்களூர் நந்தினி லே அவுட் பகுதியில் ரூ100 கோடி மதிப்பிலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகாலட்சுமிபுரம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரபாபு குற்றம்சாட்டினார்.

இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகரின் நந்தினி லே அவுட் பகுதியில் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்திய நிலம் உள்ளது. இதை எந்த வளர்ச்சி திட்டத்திற்கும் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். தற்போதுவரை பி.டி.. வசம் உள்ள நிலத்தை, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் டிநோடிபை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களுக்காக கையகபடுத்திய நிலத்தை டிநோடிபை செய்ய வேண்டியதின் அவசியம் என்ன? அரசால் டிநோடிபை செய்துள்ள நிலத்தில் விளையாட்டு திடல், பள்ளி கட்டிடம், பூங்கா உள்பட பல தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. இப்படி இருந்தும் தனியார் லாபமடையும் நோக்கத்தில் டிநோடிபை செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக கையகப்படுத்திய நிலம் டிநோடிபை செய்துள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த முறைகேட்டில் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்            24.11.2010

திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, நவ.24: திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, பிரதான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மணலூர்பேட்டை சாலையில் அமைக்கப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உரிய கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இணைந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உரிய கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இணைந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களுக்கு, வேறு இடத்தில் குடிசைகள் அமைக்க இடம் ஒதுக்குமாறு அப்பகுதியினர் முறையிட்டனர். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

 

சென்னையில் 29 ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்: தலைமைப் பொறியாளர்

Print PDF

தினமணி             23.11.2010

சென்னையில் 29 ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்: தலைமைப் பொறியாளர்

சென்னை, நவ. 22: சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள 29 ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி. அன்பழகன் தெரிவித்தார்.

"சென்னையில் வெள்ளநீர் தடுப்பு' குறித்த கருத்தரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. தொலை உணர்வு மையம் சார்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் டி. அன்பழகன் பேசியது:

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் சிறிய மழை பெய்தாலே வெள்ள அபாயம் ஏற்படுகிறது. முக்கிய நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுமே இந்த வெள்ள அபாயத்துக்கு காரணமாகும்.

எனவே சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் 29 ஏரிகளை தேர்வு செய்துள்ளோம். அந்த ஏரிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவது என திட்டமிட்டுள்ளோம். இதற்கு உலக வங்கியின் கடன் உதவியைக் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதியும் உலக வங்கியிடமிருந்து கிடைத்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் வெள்ள அபாயத்தை ஓரளவுக்கு தடுக்க முடிவதுடன், நிலத்தடி நீர் நிலையும் வெகுவாக உயரும் என்றார் அன்பழகன்.

தொலை உணர்வு மைய இயக்குநர் எம். ராமலிங்கம் கூறியது:

சென்னையில் கடந்த 2005-ம் ஆண்டு பெரிய அளவில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. அடையாறு, கிழக்கு வேளச்சேரி, சூளை, சூளைமேடு உள்ளிட்ட 36 பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

அந்த பகுதிகளை வானில் இருந்து லேசர் கதிர் மூலம் புகைப்படம் (ஏஎல்டிஎம்) எடுத்து ஆய்வுகள் நடத்தினோம். இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் ரயில்வே பாதை செல்லும் பகுதிகளில் மழை நீர் போக்கும் மதகுகள் முறையாக அமைக்கப்படாதது தெரிய வருகிறது.

மேலும் நீர் சேகரிப்பு குட்டைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணத்தால் சென்னையில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.

சாலைகளில் மதகுகள் அமைப்பது, குட்டைகளை பராமரிப்பதன் மூலம் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முடியும். மேலும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் இதற்கு தீர்வு காணலாம்.

இதனால் வெள்ள அபாயத்தை தவிர்ப்பதுடன், மழைநீர் முழுவதும் கடலுக்கு செல்வதையும் தடுக்க முடியும்.

இது போன்ற செயல் திட்டங்களை சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் இணைந்து ஜவாஹர்லால் நேரு நகர சீரமைப்பு திட்டத்தின் கீழ் செய்து வருகின்றன.

எங்களது ஆய்வு முடிவுகளை மாநகராட்சி, பொதுப்பணித்துறையிடம் வழங்கியுள்ளோம் என்றார் ராமலிங்கம்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் டி. கார்த்திகேயன், அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 48 of 204