Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 144 கோயில்களை அகற்ற முடிவு

Print PDF

தினகரன்                   23.11.2010

திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 144 கோயில்களை அகற்ற முடிவு

திருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள 144 கோயில்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தற்காலிக மற்றும் நிரந்தர கோயில்கள், கடைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ், நகராட்சி ஆணையாளர் இளங்கோ மற்றும் டிஎஸ்பி ராஜசேகர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. பூக்கடை அருகே உள்ள செட்டிப்பிள்ளையார் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி, இந்த கோயில் நேற்று அகற்றப்பட்டது. பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கோயில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையறிந்த வர்த்தகர்கள் பலரும் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

இதுகுறித்து உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ் கூறியதாவது:

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகள், சிறு கோயில்கள் அகற்றப்படவுள்ளது. போக்குவரத்திற்கு இவை பெரும் தடையாக உள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். திருச்செங்கோடு துணைக் கோட்டத்தில் நெடுஞ்சாலையில் இடையூராக உள்ள 144 கோயில்கள் படிப்படியாக அகற்றப்படும் என்றார். திருச்செங்கோடு பூக்கடை அருகே இருந்த செட்டிப்பிள்ளையார் கோயில் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

 

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்            19.11.2010

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. பூலோக வைகுண்டம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 6ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். ஸ்ரீரங்கம், காந்திசாலை, தெற்குவாசல், சித்திரை வீதிகள் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தெற்குவாசலில் கடைகள் வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். சாத்தார வீதி, உத்திரவீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

 

103 ஆக்கிரமிப்பு வீடுகள் தூள் தூள்

Print PDF

தினமலர்           19.11.2010

103 ஆக்கிரமிப்பு வீடுகள் தூள் தூள்

திருவான்மியூர் : கஸ்தூரிபாய்நகர் - திருவான்மியூர் இடையே இணைப்புச் சாலை அமைப்பதற்காக, பக்கிங்காம் கால்வாயை ஒட்டி ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 103 வீடுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அதிரடியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகளை இழந்தவர்கள், உடனடியாக குடியேறுவதற்கு வசதியாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே சாலைகள் மற்றும் மேம்பாலப்பணிகள் நடந்து வருகின்றன.அதன் ஒரு கட்டமாக, கஸ்தூரிபாய் நகரில் இருந்து திருவான்மியூர் வரை இணைப்பு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவான்மியூர் பகுதியில் கெனாலை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 103 வீடுகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் வழங்கி, கால அவகாசம் கொடுத்தனர்.ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மெத்தனப்போக்குடன் இருந்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக குடியேறும் வகையில் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் குடியிருப்புகள் ஒதுக்கிக் கொடுப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனாலும் சில ஆக்கிரமிப்பாளர்கள் முரண்டு பிடித்தனர். இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.காலை 9 மணிக்கு துவங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நீடித்தது. அதே நேரம், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பொருட்களுடன் கண்ணகி நகரில் உடனடியாக குடியேறுவதற்கு வசதியாக அரசு சார்பில் வாகன ஏற்படும் செய்யப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்," கஸ்தூரிபாய் நகரில் இருந்து திருவான்மியூர் வரை பக்கிங்காம் கால்வாயை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தற்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.அதற்காக ஆக்கிரமிப்புகள் இன்று(நேற்று) அகற்றப்பட்டன. பக்கிங்காம் கால்வாய்க்கு, தற்போது தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல, சாலைக்கு தேவையான இடம் விட்டு, வீடுகளை ஒட்டியும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்தவுன் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும்' என்றனர்.

 


Page 49 of 204