Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற நடவடிக்கை

Print PDF

தினகரன்                   18.11.2010

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற நடவடிக்கை

பெங்களூர், நவ.18: பெங்களூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் 650 வழிபாட்டு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிச.31ம் தேதிக்குள் அவற்றை அகற்ற பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூர் மாவட்டம், நகரம் ஆகியவற்றில் சிறிய, பெரிய நகரங்களில் வழிபாட்டு இடம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதுகுறித்து சுப்ரீம்கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டிச.31க்குள் மக்களுக்கு இடைஞ்சலாகவுள்ள, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை டிச.31ம் தேதிக்குள் இடித்துவிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூர் மாநகராட்சி மற்றும் பெங்களூர் நகர மாவட்டத்தில் 650வழிபாட்டு இடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு வழிபாட்டு இடங்கள் குறித்து பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் சித்தையா கூறுகையில், இதுஒரு சிக்கலான பிரச்னையாகும். இதில் நடைமுறை சிக்கல்கள் நிறையவுள்ளன. நிலம் ஆக்கிரமிக்கப்படுவது குற்றம் என்று தெரிந்தும் அதில் வழிபாட்டு இடத்தை நிறுவி மக்களையும், அதிகாரிகளையும் திசை திருப்பிவருவது பெரும் தவறு. ஆனால், இத்தவறுக்கு பக்தியின் பெயரில் மக்களே உடந்தையாகி ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வழிபாட்டு இடங்களை அகற்றும்போது அங்கு பக்தர்களால் மதித்து போற்றப்படும் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் அது கோயில் நிர்வாகிகள், மக்கள், பக்தர்கள் விருப்பப்படி மற்றொரு இடத்துக்கு மாற்றப்படுவது வழக்கம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

பெங்களூரில் மகாதேவபுராவில் ஆக்கிரமிப்பு ஆலயங்கள் அதிகளவாக 250 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து பெங்களூர் தெற்கு பகுதியிலும், கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு ஆலயங்கள் உள்ளன. பொம்மனஹள்ளியில் 7, தாசரஹள்ளியில் 9 ஆக்கிரமிப்பு கோயில்கள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்காக சிறப்புப்படை அமைக்கும் முயற்சியில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஆலயங்கள் அகற்றப்படுவது குறித்து பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தர் கூறுகையில், ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில்களால் மக்களுக்கு கஷ்டங்களே அதிகரிக்கும். எனவே, அவற்றை நீக்குவதே சரியானது. கோயில்களை அகற்றும்போது பக்தர்கள் மனம் புண்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோயில்கள் கட்ட மாற்றிடம் ஒதுக்கலாம் என்றார்.

ஆர்ச்பிஷப் பெர்னார்ட் மோசஸ் கூறுகையில், மதவழிபாட்டு இடங்களால் மக்களால் எந்தவொரு கஷ்டமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்து மதத்துக்கும் பொதுவாக வழிபாட்டு இடங்கள் அகற்றும் நடவடிக்கை இருக்கவேண்டியது அவசியம் என்றார்.

ஜாமியாமசூதி இமாம் ரியாஸ் கூறுகையில், சுப்ரீம்கோர்ட் நடவ டிக்கை சரியானதே மக்க ளுக்கு இடைஞ்சல்தரும் வகையில் ஆக்கிரமித்து வழிபாட்டு இடங்கள் அமைப்பது தவறு. அவற்றை அகற்றுவதே சரியானது என்றார்.

 

நடைபாதை கோவில்கள் இடிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர்                16.11.2010

நடைபாதை கோவில்கள் இடிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

பாரிமுனை : போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் கட்டப்பட்ட கோவில்களை இடிக்கும் பணியை மாநகராட்சி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக மூன்று கோவில்கள் இடிக்கப்பட்டன.

போக்குவரத்துக்கு இடையூறாக, சென்னையின் பல இடங்களை ஆக்கிரமித்து கோவில், சர்ச், தர்காக்கள் கட்டப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பிளாட்பார வழிபாட்டுத் தலங்களை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, சென்னையில் பிளாட்பாரங்களில் கட்டப்பட்ட, 300 வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நேற்று துவக்கியது. பர்மாபஜாரில் இருந்த விநாயகர் கோவில், கலெக்டர் ஆபீஸ் முன் மற்றொரு பிள்ளையார் கோவில், துறைமுக மருத்துவமனை எதிரில் ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகியன இடிக்கப்பட்டன.பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் இடித்துத் தள்ளினர். கலெக்டர் ஆபீஸ் பின், இரண்டு மாரியம்மன் கோவில்களை இடிக்க, குடிசைப் பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மட்டும் கோவில் இடிக்கும் பணி தாமதமானது.ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி, வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்."கோர்ட் உத்தரவில் கூறப்பட்ட அனைத்து பிளாட்பார வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்படும்' என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வேலூர் மாநகராட்சியில் விதிகளை மீறும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கால்வாய்களும் தப்பவில்லை

Print PDF

தினகரன்              16.11.2010

வேலூர் மாநகராட்சியில் விதிகளை மீறும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கால்வாய்களும் தப்பவில்லை

வேலூர், நவ.16: ‘வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் விதிகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மற்றும் ஆக்ரமிப்புக்கள் மீது முறையான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் தொன்மை நகரங்களில் வேலூரும் ஒன்று. 1866ல் நகராட்சியாகி 2008ல் மாநகராட்சியானது. இந்நகரமைப்பு ஒழுங்கற்ற வடிவமைப்பை கொண்டது. குறுகிய தெருக்களுடன் உள்ள இந்நகரின் கிழக்கு பகுதியில் கோட்டைமலை காணப்படுகிறது.

ஆகவே, சிறிது மழை பெய்தாலும் தெருக்களில் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து மக்களை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கும். ஆங்காங்கு கால்வாய்களும், கானாறுகளும் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

ஓட்டேரியில் தொடங்கி சங்கரன்பாளையம், கஸ்பா, முள்ளிப்பாளையம் வழியாக பாலாறு வரையுள்ள நிக்கல்சன் கால்வாய், பகவதி மலையில் இருந்து வேலப்பாடி, டிட்டர்லைன் வழியாக அகழி வரை ஒரு கால்வாய், சலவன்பேட்டையில் இருந்து குட்டைமேடு, ஓல்டு டவுன் வழியாக அகழி வரை உள்ள கால்வாய் என இவை அனைத்தும் மலையில் இருந்து வழியும் ஊற்று நீர் மற்றும் மழைநீரை கொண்டிருந்த கால்வாய்களாகும்.

இதுதவிர கோட்டை மலையில் இருந்து பில்டர்பெட் ரோடு வழியாக அகழி வரை செல்லும் கால்வாய் ஏற்கனவே குட்டைமேட்டில் இருந்த கால்வாயுடன் இணைந்து அகழி வரை செல்கிறது. மேலும், சைதாப்பேட்டை மலையில் இருந்து பிடிசி ரோடு, ஆற்காடு சாலை என தலா இரண்டு கால்வாய்களும் பாலாறு வரை சென்றன.

வேலூரின் நிலத்தடி நீராதாரமாக விளங்கிய இக்கால்வாய்கள் முழுவதும் நாளடைவில் சாக்கடை நீர் செல்லும் அவலநிலைக்கு சென்றன. இவ்வளவு கால்வாய்கள் இருந்தபோதும் இப்போது ஒரு கால்வாயில் கூட மழைநீர் வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அதோடு பெரும்பாலான கால்வாய்கள் இன்று ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. மாநகராட்சி அனுமதி பெறாமலேயே பல இடங்களில் கால்வாயே தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

மாநகரின் 50 சதவீத கழிவுநீரை வெளிக்கொண்டு காட்பாடி சாலையை ஒட்டி செல்லும் கானாற்றை ஆக்கிரமித்து பெரியளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல் வேலூரில் அனுமதியின்றி செயல்படும் 600க்கும் மேற்பட்ட மன்சில்கள் என்ற விடுதிகள், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக கட்டமைப்புகளுடன் உள்ள வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தற்போது விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மாநகரமைப்பு அலுவலர் கண்ணனிடம் கேட்ட போது, ‘இதுவரை விதிகளை மீறி கட்டிடம் கட்டியதாக 40 முதல் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டவர்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கானாறுகளின் மீதுள்ள ஆக்ரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அவை இடித்துத் தள்ளப்படும்என்றார்.

 


Page 51 of 204