Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கியது

Print PDF

தினகரன்               11.11.2010

ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கியது

மதுரை, நவ. 11: மதுரை நகர் முழுவதும் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். பெரியார் பஸ்நிலைய சுற்றுப்பகுதி மற்றும் மேலவெளி வீதி, வடக்கு வெளிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மதுரை நகரின் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப் புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் உத்தரவிட்டார். இதன்படி நேற்று நடவடிக்கை ஆரம்பமானது.

பெரியார் பஸ் நிலையத்தின் சுற்றுப்பகுதி, கட்டபொம்மன் சிலை சுற்றுப்பகுதி, மேலவெளிவீதி, வடக்கு வெளிவீதி, சிம்மக்கல், யானைக்கல், வக்கீல் புதுத்தெரு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

போக்குவரத்துக்கு இடையூறான அனுமதியற்ற விளம்பர போர்டுகள், கடை முன் அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகள், சாலை ஓர கடைகள் அகற்றப்பட்டன. ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தொடரும் என ஆணையாளர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு வீதிகளின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறு நீங்கியது.

கால்வாய் அடைப்புகள் நீக்கம்

கழிவுநீர் கால்வாய் மற்றும் வடிகால்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க அடைப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. பெரியார் பஸ்நிலையம், ரயில் நிலைய முன்பகுதி, கோரிப்பாளையம் தேவர்சிலை மற்றும் ராஜாஜி மருத்துவமனை பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால்களில் அடைபட்டு இருந்த மண் மற்றும் கழிவுகள் வெளியேற்றப்பட்டன.

 

விருத்தாசலம் வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

Print PDF

தினகரன்                  10.11.2010

விருத்தாசலம் வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

விருத்தாசலம், நவ. 10: விருத்தாசலம் நகரில் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம் அருகில், கடை வீதி, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் ஓடை, வடிகால் ஆக்கிரமிப்பு களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் நகரில் வடிகால், ஓடைகள் ஆக்கிர மிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. விருத்தாசலம் நகரில் முக்கிய இடங்களாக கடை வீதி, கடலூர் ரோடு, பேருந்து நிலையம், ஜங்ஷன் ரோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் போது மழை நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலை எது, பள்ளம் எது எனத்தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பு இரவு பெய்த மழையால், சாலைகளில் ஆறு போல் மழைநீர் ஓடியது.

பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து எழுந்து சென்றது பரிதாபமாக இருந்தது. சாலையில் நடக்கவே சிரமப்படும் நிலை இருந்தது.

வடிகால், ஓடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதுதான். விருத்தாசலம் நகரில் முக்கியமாக ஆலடி ரோட்டில் உள்ள வெள்ள நீர் வடிகால் ஓடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம், கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், வடிய வழியில்லாமல் சாலையில் ஓடுகிறது.

ஓடை கரையில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்கிறது. கடந்த ஆண்டு இந்த ஓடையில் ஆக்கிரமித்து பாத்ரூம் கட்டியிருந்த வீட்டில் தங்கி இருந்த சத்தியா என்ற இளம்பெண் சுவர் இடிந்து பரிதாபமாக இறந்தார். அப்போது நகராட்சி சார்பில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தலைமையில், ஆக்கிரமிப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அளந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் தேதியும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதற்கு பிறகு நகராட்சி நிர்வாகம் அதற்கான முயற்சியில் கூட இறங்காதது பொதுமக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் ஆர்வம் காட்டிய நகராட்சி நிர்வாகம், அதை கிடப்பில் போட்டதற்கான காரணம் இன்று வரை சிதம்பர ரகசியமாகவே உள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி விட்டது, பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே நகராட்சி நிர்வாகம் ஜங்ஷன் ரோடு, கடை வீதி, பேருந்து நிலையம் அருகில், கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் குப்பை கூளங்களால் நிரம்பி காணப்படுகிறது.

 

சென்னையின் முக்கிய சாலைகளில் டிஜிட்டல் விளம்பரங்கள் அகற்றும் பணி

Print PDF

தினமலர்               09.11.2010

சென்னையின் முக்கிய சாலைகளில் டிஜிட்டல் விளம்பரங்கள் அகற்றும் பணி

சென்னை: சென்னை நகரில் 248 இடங்களில், உயர்ந்த கட்டட சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பரங்கள் அகற்றும் பணி, மேயர் முன்னிலையில் நேற்று துவங்கியது.

சென்னையில், நகரை அழகுபடுத்தும் நோக்கோடு, முக்கிய சாலைகளிலும், அரசு கட்டடங்களிலும் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள், கடந்த 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, மேயர் சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், விளம்பரங்கள் அகற்றப் படவில்லை. இதை தொடர்ந்து, மேயர் முன்னிலையில், விளம்பரங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. முதலில், கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள உயர்ந்த கட்டடங்களில், சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த மொபைல் போன் நிறுவன விளம்பரங்களை தார் பூசி அழிக்கும் பணி நடந்தது.

அப்போது மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: சென்னையை அழகுபடுத்தும் விதத்தில், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகியவற்றில், சுவர் விளம்பரங்கள் எழுதவும், ஒட்டவும் தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், பூங்காங்கள் உட்பட 3,464 கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படும், 250க்கும் மேற்பட்ட பாலங்கள், சுரங்கப் பாதைகளில் சுவர் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான சுவர்களில், வெள்ளையடித்து தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங் கள் வரையப்படுகிறது. நகரில், விளம்பர பலகைகள் வைக்க, சட்ட ரீதியாக முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பரதாரர்கள் புது யுக்தியுடன், பிரதான சாலைகளில் உள்ள, உயர்ந்த கட்டட சுவர்களில், டிஜிட்டல் விளம்பரங் களை ஒட்டி வருகின்றனர்.

நகரின் அழகை கெடுக்கும் வகையில், வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டது. விளம்பரதாரர்கள் அகற்றவில்லை என்பதால், தமிழக திறந்தவெளி இடங்கள் அழகை கெடுக்கும் தடை சட்டம் 1959ன் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விளம்பரங்கள் அழிக்கப்படுகிறது. நகரில், 248 உயர்ந்த கட்டடங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவைகள் அகற்றப்படும். தடை சட்டத்தின் படி, கட்டட உரிமையாளரிடம் 1,000 ரூபாய் அபராதம் வசூலிப்பதோடு, விளம்பரத்தை அழிக்க ஆகும் செலவும் வசூலிக்கப்படும்.10 மண்டலங்களிலும், இன்று விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெறுகிறது. "ஜல்' புயலால், சென்னையில் 7.4 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழை நீர் 150க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப்கள் மூலம் அகற்றப்பட்டது. 64 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 70 மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 12 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மற்றும் ஏழாயிரம் ரொட்டிகள் வழங்கப்பட்டன. மழையினால், சாலைகளில் விழுந்த மரக்கிளைகள், குப்பைகள் 850 டன் கூடுதலாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு மேயர் கூறினார். உடன், கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.

 


Page 53 of 204