Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பகதூர் ஷா சபர் மார்க்கில் நவீன கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி இடித்து தள்ளியது

Print PDF

தினகரன் 17.09.2010

பகதூர் ஷா சபர் மார்க்கில் நவீன கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி இடித்து தள்ளியது

புதுடெல்லி, செப். 17: மாநகராட்சியின் ஏல நடவடிக்கைகளில் பங்கேற்காமல் நவீன கழிப்பிட வளாங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனம் கட்டியது. விதி மீறி கட்டப்பட்ட கழிப்பிட வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு, டெல்லியின் பல்வேறு இடங்களில் நவீன கழிப்பிட வளாகங்களைக் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டபோது, 28 கட்டுமான நிறுவனங்கள், கழிப்பிட வளாகங்களைக் கட்டித் தர விண்ணப்பித்தன.

அதைத் தொடர்ந்து, 28 நிறுவனங்களுக்கும் கழிப்பிட வளாகம் கட்டுவதற்கான இடங்களை மாநகராட்சி ஒதுக்கித் தந்து, மாதிரி வடிவத்தை உருவாக்கிக் காட்டும்படி கேட்டுக் கொண்டது. மாதிரி வடிவங்களை வல்லுனர்கள் குழு பார்வையிட்டு ஒப்புதல் அளித்தது.

அதன்பிறகு, ஏல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது. ஆனால், 28 நிறுவனங்களும் அதில் பங்கேற்கவில்லை. வெறும் 8 நிறுவனங்களே டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்று, அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது.

அதனால், அந்த 8 நிறுவனங்களுக்கு மட்டுமே நவீன கழிப்பிட வளாகங்களை கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது. ஆனால், ஏல நடவடிக்கையில் பங்கேற்காத 20 கம்பெனிகளில் சில நிறுவனங்களும்கூட, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிப்பிட வளாகத்தை கட்டத் தொடங்கின.

அந்த வகையில் பகதூர் ஷா சபர் மார்க்கில் ஒரு கட்டுமான நிறுவனம் நவீன கழிப்பிட வளாகத்தை கட்டத் தொடங்கி, 50 சதவீத பணிகளை முடித்து விட்டது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அந்நிறுவனம் மாநகராட்சி விதிகளின் அடிப்படையில் டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்காமலேயே கட்டிடத்தை கட்டுவது தெரியவந்தது. அதனால் அந்த கட்டிடத்தை இடித்துத் தள்ள மாநகராட்சி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கழிப்பிட வளாகக் கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இதுபற்றி மாநகராட்சி உயரதிகாரி கூறுகையில், "இந்நிறுவனத்தைப் போலவே மேலும் பல நிறுவனங்கள், மாநகராட்சியின் ஏல நடவடிக்கையில் பங்கேற்காமல் கழிப்பிட வளாகங்களை கட்டி வருகின்றன. அதுபோன்ற விதி மீறி கட்டப்பட்ட வளாகங்கள் அனைத்தும் இடித்துத் தள்ளப்படும்" என்றார்.

 

சந்திரா லே&அவுட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 15.09.2010

சந்திரா லே&அவுட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெங்களூர், செப். 15: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பெங்களூர் சந்திராலேஅவுட் காவல்சரகம், நாகர்பாவி சர்வே எண் 129ல், மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலமுள்ளது. அங்கு சிலர் ஆக்கிரமித்து வீட்டு உபயோகப் பொருள் ஷோரூம், வாகன காரேஜ் உள்ளிட்ட 6 கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில் மாநகராட்சிக்கு ஆதரவாக ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து நேற்றுகாலை அங்கு சென்ற பிடிஏ அதிகாரிகள் புல்டோசர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறி அங்குள்ள வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆயினும் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்ட இடத்தில் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி 09.09.2010

அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பெங்களூர், செப்.8: அல்சூர் சோமேஸ்வரர் கோயில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.

பெங்களூர் அல்சூரில் மிகவும் பழமையான புகழ்பெற்ற சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுப்புற பகுதிகளில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டப்பட்டிருந்தன.இக்கடைகள் பல ஆண்டுகளாக இங்கேயே உள்ளன.

இதனால் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவந்தது. கடந்த மாதம் இக்கோயிலுக்குச் சென்ற முதல்வர் எடியூரப்பாவிடம் பொதுமக்கள் இது பற்றி புகார் அளித்தனர். ஏற்கெனவே இந்தக்கடைகளை அகற்ற நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருப்பதாக முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தன.

இதையடுத்து அக்கடைகளை அகற்றி கோயில் பகுதியை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும்படி எடியூரப்பா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 8 மணி அளவில் அறநிலையத்துறை, பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர்.

அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். துணி, பாத்திரம், பழம், பூக்கடைகள் அதிக அளவில் இருந்தன. மொத்தம் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. கடைகளை அகற்ற வியாபாரிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் போலீஸôரின் உதவியுடன் கடைகள் அகற்றப்பட்டன.

 


Page 65 of 204