Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

போடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 04.09.2010

போடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

போடி, செப். 3: போடி அருகே பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

போடியை அடுத்த மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனி 2-ம் வார்டில் ஆதி திராவிடர் நலத் துறைக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேரூராட்சி சாலையும் உள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த சிலர் நத்தம் புறம்போக்கு நிலங்களையும், சாலையையும் ஆக்கிரமிப்பு செய்துள்னர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். இப்பகுதியில் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், குழந்தைகள் சத்துணவு மையம் ஆகியவற்றிற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர். இதில் குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் உள்ளிட்டவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

அப்போது தேனி மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை வட்டாட்சியர் முருகேஸ்வரி, போடி வட்டாட்சியர் சு.ராஜசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் மணிமாறன், வட்ட துணை சர்வேயர் மாணிக்கவாசகம், ஆதி திராவிடர் நலத் துறை சர்வேயர் சோணை, வருவாய் ஆய்வாளர் ரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் ஜி.கண்ணன், மேலச்சொக்கநாதபுரம் நிர்வாக அலுவலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

இந் நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வழங்காமல் திடீரென வீடுகளை இடித்துவிட்டதால் சாலையில் வசிப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை ஒருதலைப்பட்சமாக அகற்றியுள்ளதாகவும், தங்களது பட்டாக்களில் சர்வே எண்கள் மாறியுள்ளதால் தவறுதலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்ததாகவும், இதை பேரூராட்சி நிர்வாகமும் ஆய்வு செய்து வீட்டு வரி விதித்துவிட்டு தற்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துவிட்டதாகவும், ஆரம்பத்திலேயே நாங்கள் வீடு கட்டும்போதே தடுத்திருந்தால் தங்களுக்குப் பட்டா வழங்கிய நிலங்களில் வீடு கட்டியிருப்போம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலர் கூறும்போது, ஆக்கிரமிப்பை அகற்ற தனிப்பட்ட முறையில் யாருக்கும் அறிவிப்பு வழங்கவில்லை. பொதுவாகத் தண்டோரா செய்தோம். அவர்கள் தங்கள் பட்டா நிலங்களில் வீடு கட்டி வசிக்கலாம் என்றார்.

ஆக்கிரமிப்பு அகற்றலின்போது தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (போடி புறநகர் பொறுப்பு) கல்யாணக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

பல கோடி ரூபாய் அரசு நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 03.09.2010

பல கோடி ரூபாய் அரசு நிலம் மீட்பு

சென்னை : வேளச்சேரி பிரதான சாலையில், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த ஐந்து கிரவுண்ட் அரசு இடம் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் இடம் உள்ளது. இது, தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்தது. இந்த இடத்தை காலி செய்யக்கோரி, சி.எம்.டி.., ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கிரமிப்பாளர் இடத்தை காலி செய்ய மறுத்து, ஐகோர்ட்டுக்குச் சென்றார்.இது தொடர்பான வழக்கில் இடத்தை கைப்பற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்தார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை கடந்த 13ம் தேதி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.இதைத் தொடர்ந்து சி.எம்.டி.., மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, வேளச்சேரி பிரதான சாலையில் இருந்த ஆக்கிரமிப்பை நேற்று அதிரடியாக அகற்றினர்.சுற்றுச்சுவர்கள், ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் இடம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.

Last Updated on Friday, 03 September 2010 09:33
 

காஜாமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன் 02.09.2010

காஜாமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

திருச்சி, செப். 2: காஜாமலை பகுதியல் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

காஜாமலை, நடுத்தெரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரவி மாநகராட்சியில் புகார் அளித்தார். புகாரை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று முன்தினம் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கொட்டகையை அகற்றினால் தீக்குளிப்பதாகவும் மிரட்டல் விடுத்ததை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர். தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறுகையில், இதுபற்றி கே.கே.நகர் போலீசில் தகவல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் விரைவில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவோ அல்லது மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றார்.

 


Page 67 of 204