Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சர்ச்சையில் சிக்கிய சாக்கடை கால்வாய் இடிப்பு

Print PDF

தினமலர்      26.05.2010

சர்ச்சையில் சிக்கிய சாக்கடை கால்வாய் இடிப்பு

கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பாதாள சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டது. கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக, சாலையின் அகலம் குறைந்துள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு இடையே சென்று வந்தனர். தன்னார்வ அமைப்புகள் உட்பட பொதுமக்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். இதன்படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டது. தற்போது சாலையோர நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்பின், பழைய காவல் நிலையம் அருகே, பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக துவக்கப்பட்டது. ஆனால், நில அளவை செய்து, "சர்வே' கல் பதிக்கப்பட்ட இடத்தை ஒட்டி கால்வாய் அமைக்கவில்லை. மாறாக, 2 முதல் 3 அடிவரை விட்டு, கால்வாய் அமைக்கப்பட்டது.

இதனை மீண்டும் நிலஅளவை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர். இதனால், பாதாள சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தலைமை சர்வேயர் மூலம் மீண்டும் நில அளவை செய்யப்பட்டது. இதில், பெரும்பாலான கட்டடங்கள் 2 முதல் 4 அடிவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில், ஓரிரு கட்டடத்தில் ஆக்கிரமிப்பின் அகலம் கூடுதலாக இருந்தது. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட சர்வேயர்கள் சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இப்பிரச்னையில், பாதிக்கப்பட்டோருக்கும், அலுவலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் முன்னிலையில், பழைய நிலஅளவை ஆவணத்தின்படி, மீண்டும் நிலஅளவை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர். மேலும், உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நில அளவையர் மீது வழக்கு தொடுக்கவும் பலர் முடிவெடுத்தனர். நில அளவையின் பழைய ஆவணத்தின் நகல் உட்பட சில முக்கிய ஆவணங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை நில அளவை செய்த இடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில்,"இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது வெறும் கண்துடைப்பு நாடகம்; பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட நில அளவையர் மீது வழக்கு தொடுக்கப்படும்' என பாதிக்கப்பட்டோர் எச்சரித்துள்ளனர்.

 

போக்குவரத்துக்கு இடையூறு பஸ் நிலைய கங்கனா மண்டபம் இடிக்கப்படும்

Print PDF

தினகரன்    25.05.2010

போக்குவரத்துக்கு இடையூறு பஸ் நிலைய கங்கனா மண்டபம் இடிக்கப்படும்

வாலாஜா, மே 25: வாலாஜா பஸ்நிலையத்தில் உள்ள கங்கனா மண்டபத்தை இடிப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாலாஜா நகராட்சி மன்றக்கூட்டம் அதன் தலைவர் நித்தியானந்தம் தலைமையில் நேற்றுமாலை நடந்தது. துணைத் தலைவர் வள்ளியம்மாள், பொறியாளர் ஆனந்தஜோதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள பழமையான கங்கனா மண்டபம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

இதுகுறித்து மண்டப நிர்வாகத்தினர், மண்டபத்தை இடித்துக்கொள்ளலாம் என கடிதம் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இந்த மண்டபத்தை இடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டிலிருந்து நகராட்சிக்கு சொந்தமான 2 கடைகள் டாஸ்மாக் குடோனுக்காக கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாடகை பணம் தரவில்லை. இது சம்பந்தமாக பல முறை கடிதம் அனுப்பியும், எந்தவித பதிலும் வரவில்லை.

எனவே, வாடகை பாக்கி தொகை ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை வசூலிக்கவும், அந்த கடையை மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

போடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி    24.05.2010

போடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

போடி, மே 23: போடியில் விடுமுறை நாளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அதிகாரிகள் அகற்றி, காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. சிலர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என எண்ணி ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். அவ்வாறு விடுமுறை நாளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சிரமமாக இருந்து வந்தது.

போடிக்கு மேற்கே சூரியா நகரில் பூங்கா அமைய உள்ள பகுதியில் இப்பகுதியை சேர்ந்த சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இதற்காக குடிசை அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது.

உடனடியாக ஆணையர் க. சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப் பயன்படுத்திய பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆணையர் கூறியதாவது:

நகராட்சிப் பகுதியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். போடி நகரில் உள்ள பூங்காக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றில் பொழுது போக்கு அம்சங்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

சூரியா நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதைத் தடுத்து, அவர்கள் மீது போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நகரில் ஆக்கிரமிப்பு செய்தால் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:18
 


Page 104 of 204