Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி         14.05.2010

கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர், மே 13: கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கரூர் நகராட்சி ஆணையராக அண்மையில் பொறுப்பேற்ற கோ. உமாபதி, நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், தூய்மைப் பணி, பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25 பேர், 3 ஷிப்ட்களில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையத்துக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நகராட்சி ஆணையர் உமாபதி தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட கூடுதலாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, கடைகளில் காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று நகராட்சி ஆணையர் உமாபதி ஆய்வு செய்தார்.

ஆணையர் எச்சரிக்கை

அரசின் விதிமுறைகளை மீறி கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடக் கூடாது. மேலும், கடைகளில் சுத்தமான, தரமான பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சுகாதாரமற்ற பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளின் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அனைத்துக் கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நகராட்சி வேண்டுகோள்

பேருந்து நிலையத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பராமரிப்புப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தரை தளத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்ட போது நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், நகராட்சி அலுவலர்கள் ஜானகிராமன், . ராஜா, குத்தகை அலுவலர் பாபு, உதவிப் பொறியாளர் சரவணன், ஆய்வாளர்கள் ஜானகிராமன், நாசர், ஆர். செந்தில், என். தேவராஜ், ஆர். சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி     14.05.2010

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி, மே 13: பழனியில் காந்தி சாலை, ஆர்.எப். சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் புதன்கிழமை நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகள் ஆட்சேபணை தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.

எனவே வியாழக்கிழமை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்குப் பல வியாபாரிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். இருப்பினும் போலீஸôர் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் காந்தி சாலையில் மார்க்கெட் முன்பு சுமார் 20 அடி வரை நீட்டப்பட்டிருந்த கடைகள், மேற்கூரைகள் ஆகியவற்றைஅகற்றினர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் நகராட்சி லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஆர்.எப். சாலையிலும் சுறா பட பிளெக்ஸ் போர்டு இயந்திரத்தைக் கொண்டு கிழிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் அருகேயும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

 

Last Updated on Friday, 14 May 2010 09:34
 

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட ரோடுகளில் அனைத்து ஆக்ரமிப்புகளும் அகற்றப்படும் நகராட்சி ஆணையாளர் தகவல்

Print PDF

தினமலர்        14.05.2010

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட ரோடுகளில் அனைத்து ஆக்ரமிப்புகளும் அகற்றப்படும் நகராட்சி ஆணையாளர் தகவல்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ரோடுகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தற்காலிக ஆக்ரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட நகராட்சி ரோடுகள் மற்றும் தெருக்களிலுள்ள அனுமதியின்றி தற்காலிக ஆக்ரமிப்புகள் அனைத்தும் 1920ம் வருட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் பிரிவு 182ன் கீழ் ஒவ்வொரு வாரமும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் நகராட்சியால் போலீஸ் பந்தோபஸ்துடன் அகற்றப்படவுள்ளது. ஆகையால் ஆக்ரமிப்பு செய்துள்ளவர்கள் தங்களது ஆக்ரமிப்புகளை தாங்களே முன்வந்து அப்புறப்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

தவறும்பட்சத்தில் நகராட்சியால் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அகற்றப்பட்ட பொருட்கள் கண்டிப்பாக ஆக்ரமிப்புதாரர்களிடம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்படுகிறது. மேலும் நகராட்சி பகுதிகளில் கட்டடம் கட்டுவோர் ரோடுகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கட்டுமான பொருட்களை மற்றும் கட்டட இடிபாடுகளை குவித்துத் கொண்டு 24 மணிநேரத்திற்குள் அவற்றை கட்டடத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறின்றி ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக குவிக்கப்பட்டு அதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதும்பட்சத்தில் 1920ம் வருட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 188ன் கீழ் நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டு நகராட்சிக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்படுவதாக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 14 May 2010 07:13
 


Page 109 of 204