Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

இணைப்பு சாலை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 03.05.2010

இணைப்பு சாலை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்

கோவை : பாப்பநாயக்கன் பாளையத்திலிருந்து நவ இந்தியா வரை செல்லும் இணைப்பு சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்காள் லே-அவுட் பகுதியிலிருந்து நவ இந்தியா வரையிலான இணைப்பு சாலைக்கு உள்ளூர் திட்டக்குழுமம் நிதி ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து பணிகளை துவக்கி விரைவாக நிறைவு செய்ய திட்டமிட்டு கோவை மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேற்று துவக்கினர். முதற்கட்டமாக பாப்பநாயக்கன்பாளையம் மின்சார எரியூட்டு மையத்திற்கு அருகிலுள்ள கருப்பக்காள் லே - அவுட் பகுதியிலிருந்து நவ இந்தியா செல்லும் பாதையில், இணைப்பு சாலை அமைக்கும் பகுதிக்கு இடையூறாக இருந்த எல்லை கருப்பராயன் கோவிலை மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் அப் புறப்படுத்தினர்.

இதையடுத்து அப்பகுதியில் ரோட்டின் இரு பகுதியிலுமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கருப்பக்காள் லே - அவுட் பகுதியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு இரு பகுதியிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Last Updated on Monday, 03 May 2010 06:36
 

அரியலூரில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு

Print PDF

தினமணி 30.04.2010

அரியலூரில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு

அரியலூர், ஏப். 29: அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை, சாலைப் பணியாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பேருந்து செல்ல முடியாத வகையில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் உத்தரவின் பேரில், நகராட்சி நிர்வாக அலுவலர் த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அரியலூர் பேருந்து நிலையம், சத்திரம், எம்.பி. கோயில் தெரு, மார்க்கெட் தெரு ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

 

டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமணி 30.04.2010

டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

போடி, ஏப். 29: போடி நகரில் போக்குவரத்து, வர்த்தகர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றி, பறிமுதல் செய்தனர்.

போடி நகரில் தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பள்ளிகள், தனியார் அமைப்புகள் போன்றவற்றின் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றினால் போக்குவரத்துக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது.

இவற்றை அகற்ற பொதுமக்களும், போடி வர்த்தகர் சங்கத்தினரும் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில், வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போடி நகரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றி, பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் தெரிவித்தபோது, டிஜிட்டல் பேனர்களை போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் வைக்கவும், அனுமதி பெற்று வைக்கவும் நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சி குறிப்பிடும் இடத்தில் மட்டும், நிகழ்ச்சி நடக்கும் தேதிக்கு 2 நாட்கள் முன் வைத்துவிட்டு நிகழ்ச்சி நடந்த மறுநாளே பேனர்களை அகற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 114 of 204