Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்ஒரு வாரத்தில் அகற்றாவிடில் நடவடிக்கை:வீட்டுச்சுவர்களில் 'நோட்டீஸ்' ஒட்டி அதிரடி

Print PDF

தினமலர் 30.04.2010

நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்ஒரு வாரத்தில் அகற்றாவிடில் நடவடிக்கை:வீட்டுச்சுவர்களில் 'நோட்டீஸ்' ஒட்டி அதிரடி

ஆரணி:ஆரணி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி இருந்த இடங்களை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆரணி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆரணி நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களில் நகராட்சி அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கட்டப்பட்டு இருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த நோட்டீசை வீட்டு உரிமையாளர்கள் பெறவில்லை.

இதையடுத்து, நகராட்சி பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாலாஜி, சுகாதார ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் கிரி ஆகியோர் நேரடியாக சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்குள்ள சுவற்றில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். அதில் கூறியிருப்பதாவது:நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளீர்கள். எனவே, இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, நகராட்சி நிர்வாகத்துக்கு எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட விதிகளின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 30 April 2010 07:20
 

ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி 29.04.2010

ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

பெங்களூர், ஏப்.28: மழை காலத்துக்கு முன் ஏரிகளை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த முதல்வர் எடியூரப்பா, திடீரென தனதுதில்லி பயணத்தை ரத்து செய்தார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாநில

உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யாவை அனுப்பிவைத்தார். இதையடுத்து பெங்களூர் நகரில் பிடிஏ மேற்கொள்ளும் ஏரிகள் சீரமைப்புப் பணியை பார்வையிட புதன்கிழமை காலை 8 மணிக்கு அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றார் எடியூரப்பா.

உல்லால், மல்லசந்திரா, காதீநகர், கோனசந்திரா, மற்றும் சோபுரம் ஏரிகளை எடியூரப்பா பார்வையிட்டார். இந்த ஏரிகளில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

உல்லால் ஏரிக்கு எடியூரப்பா சென்றபோது அந்த ஏரியை சுத்தப்படுத்தி, சீரமைக்கும் பணி குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எல்லப்ப ரெட்டி முதல்வரிடம் விவரித்தார். ஏரி பாதுகாப்பு, நிலத்தடி நீரை அதிகப்படுத்த எடுக்க வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். உல்லால் ஏரியில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த ஏரிப் பகுதிக்கு முதல்வர் வந்தபோது அவரை விஸ்வேஸ்வரய்யா லே-அவுட்டில்குடியிருக்கும் பொதுமக்கள் சந்தித்து குறைகளைத் தெரிவித்தனர். அந்த லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் எடியூரப்பா உறுதி அளித்தார்.

பிறகு அங்கிருந்து மல்லசந்திரா ஏரிப்பகுதிக்கு எடியூரப்பா சென்றார். அந்த ஏரியில் தற்போது நீர் இல்லை. இதனால் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. அங்கு எடியூரப்பாவிடம் மனு ஒன்றை அளித்தார் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்.

ஏரியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆழ் குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே, அப்பகுதியில் குடிநீர் விநியோகத்துக்கு நிரந்தர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். மழைக் காலத்துக்கு முன் ஏரிகளை தூர் வாரும் பணியை செய்து முடிக்க உடன் சென்றிருந்த அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டார்.

பிறகு அங்கிருந்து கெங்கேரி துணை நகருக்கு சென்றார் எடியூரப்பா. அங்கு சென்றதும் முக்கிய சாலையில் இறங்கி சற்று தொலைவில் உள்ள காதீநகர் ஏரிப் பகுதிக்கு நடந்தே சென்றார் எடியூரப்பா. அந்த ஏரியைச் சுற்றி 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு குடியிருக்கும் 2 ஆயிரம் குடும்பத்தினரை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார் எடியூரப்பா.

நியாய விலை கடையில் திடீர் சோதனை: அங்கிருந்து திரும்பும்போது வழியில் இருந்த நியாய விலை கடைக்கு திடீரென சென்றார் எடியூரப்பா. அந்தக் கடையின் வரவு-செலவு நோட்டை பார்வையிட்டார். எடியூரப்பாவுடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஸ்ரீநிவாஸ், ஷோபா கரந்த்லஜே,மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், பி.டி.. தலைவர் சித்தய்யா உள்பட உயர் அதிகாரிகள் எடியூரப்பாவுடன் சென்றிருந்தனர்.

 

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு

Print PDF

தினமணி 29.04.2010

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு

திருச்சி, ஏப். 28: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. கூட்டங்களுக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ரெ. ஸ்ரீராமன் (இந்திய கம்யூ.): பொன்மலைக் கோட்டத்தைச் சேர்ந்த கொட்டப்பட்டு கிராமத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 91,200 சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி மனைகளாக்கியவர்கள், இப்போது இதற்கு ஈடாக எடுத்துக் கொண்ட அளவுக்கும் குறைவாக நிலத்தைத் தர முன்வருகிறார்கள். இதற்கான பொருளை ஒத்திவைக்க வேண்டும்.

ஜெ. சீனிவாசன் (அதிமுக): இதுபோல, குப்பை கொட்டி வந்த இடங்கள், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை எல்லாம் பலரும் ஆக்கிரமித்துவிட்டனர். பறிபோகிவிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்துல்லா (சுயே.): எனது வார்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான 9000 சதுர அடி இடத்தில் மக்கள் குப்பை கொட்டி வந்தனர். இப்போது அந்த இடம் யாரிடம் இருக்கிறது? மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியுமா?

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வணிக வளாகத்துக்கு அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான 2,400 சதுர அடி நிலத்தில் இப்போது தனியார் வாகன நிறுத்தம் இருக்கிறது. யார் கொடுத்தது? யார் வாங்கியது?

து. தங்கராஜ் (இந்திய கம்யூ.): உறையூர் பாத்திமாநகரில் பொது இடத்தில் பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெ. அறிவுடைநம்பி (திமுக): மாநகராட்சியில் முன்னாள் பொறியாளராக இருந்த ஒருவர் நமது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஓராண்டாகியும் வழக்கை முடிக்கவில்லை. இருபுறமும் கழிவுநீர்க் கால்வாய் அமைத்தும் பயனின்றி இருக்கிறது. மாநகராட்சி வழக்குரைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

ஜெ. சீனிவாசன் (அதிமுக): மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு, உள்ளே நுழையக் கூடாது என நம் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுதான் இப்போதைய "ஃபேஷன்'.

ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி அதிகாரிகள் இவற்றை கவனிக்க வேண்டும். தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். பாலமுருகன் (திமுக): எனது வார்டில் எம்.பி. நிதியிலிருந்து ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒருவர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தார்.

பல ஆண்டுகளாகியும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன?

ஜெ. செந்தில்நாதன் (காங்.): சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் குடிநீர் தொட்டிக்கு கீழே கடைகள் கட்டும் பணி இன்னும் ஏன் முடியவில்லை.

ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. விரைந்து அவற்றைத் திறக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருமானம் வரும் இனங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஓட்டுநர்கள் வேண்டும்!

இரா. மூக்கன் (திமுக): மாநகராட்சியில் 45 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள்.

ஓட்டுநர்கள் இல்லாமல் வாகனங்களை வாங்கி என்ன செய்வது? காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

மு. வெங்கட்ராஜ் (சுயே.): 5 ஓட்டுநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணியமர்த்த ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது.

இதற்கு மாநகராட்சியிலேயே ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பலாமே?

ஆணையர் த.தி. பால்சாமி: காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநகராட்சியிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

நந்திகோவில் தெருவில்

மீண்டும் வாகன நிறுத்தம்

த. குமரேசன் (திமுக): தெப்பக்குளம், நந்திகோவில் தெருவில் ஏற்கெனவே இருந்த வாகன நிறுத்தத்தைத் தொடரச் செய்ய வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு அங்கே இடம் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (இந்தத் தீர்மானத்தை காங். உறுப்பினர் இரா. ஜவஹர் வழிமொழிவதாகக் கூறினார்.)

பள்ளிகளில் காலை உணவு

ரெ. ஸ்ரீராமன் (கம்யூ): சில மாநகராட்சிப் பள்ளிகளில் இப்போது நன்கொடையாளர்களின் உதவியுடன் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் தவறினால் நிறுத்தப்படுகிறது. எனவே, மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களை அதிகமாகச் சேர்க்க, ஏழை, எளிய மக்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க, மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து காலை உணவு வழங்க வேண்டும்.

(இதற்கான தீர்மானத்தை இந்திய கம்யூ. உறுப்பினர்கள் ஸ்ரீராமன், து. தங்கராஜ், வை. புஷ்பம் ஆகியோர் கையெழுத்திட்டு மேயரிடம் அளித்தனர். கோவை மாநகராட்சியில் இதுபோன்ற திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அரசுக்கு இதை அனுப்பிவைத்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என்றும் ஆணையர் பால்சாமி பதிலளித்தார்).

 


Page 115 of 204