Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சேலம் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி              07.03.2013

சேலம் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சேலம் சின்னக் கடை வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.

 சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சின்னக் கடை வீதி, அக்ரஹாரம் பகுதிகள் எந்த நேரமும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுபவை. மேலும் இங்கு சாலைகள் குறுகியதாக இருப்பதால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக அம்மாப்பேட்டை செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 மேலும் மழைக் காலங்களில் மழை வெள்ளம் வடிந்து ஓடுவதற்கு இந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் தடையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் பெரிய அளவிலான வடிகால் அமைப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதையடுத்து ஏற்கெனவே உள்ள சாக்கடைக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பவர்கள் அவற்றை அகற்றிக் கொள்ளும்படி ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் அரங்கநாதன், உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், சிபிச் சக்கரவர்த்தி உள்ளிட்ட பொறியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கினர்.

 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பட்டை கோயில் பகுதியில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் வரையிலும் சாலையோரங்களில் கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.

 இந்த பணியின்போது மாநகர காவல் உதவி ஆணையர் ரவீந்திரன், நகர ஆய்வாளர் சூரியமூர்த்தி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
 

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

Print PDF
தினகரன்         05.03.2013

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

திருச்சி, : மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை மேம்பாடு, கழிவறை பராமரித்தல், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 பேர் மனு அளித்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட மேயர், மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  முகாமில் மாநகர பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மருதப்பிள்ளை, நகர் நல அலுவலர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர்கள் உதயசூரியன், தயாநிதி, ரங்கராஜன், ராஜம்மா, பிரபுகுமார், ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் அமுதவள்ளி, பாலகுருநாதன், நாகேஷ், கண்ணன், திட்டப்பிரிவு உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சிவபாதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

Print PDF
தினமலர்          04.03.2013

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்


சென்னை: கேசவப்பிள்ளை பூங்கா குடிசை மாற்று குடியிருப்பில், விதிமீறி கட்டப்பட்ட, கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன.பட்டாளம், கேசவப்பிள்ளை பூங்காவில், மூன்று பிரிவுகளில், 3,500 குடியிருப்புகள் உள்ளன. இதில், தரைதளத்தில் குடியிருப்போர், தெருக்களையும், பூங்காவையும் ஆக்கிரமித்து கடைகள், குடிசை வீடுகளை கட்டியுள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், நேற்று, "பொக்லைன்' இயந்திரம் மூலம், 100 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை, பேசின் பாலம் போலீசார் உதவியுடன் இடித்து அகற்றினர்.
Last Updated on Monday, 04 March 2013 11:34
 


Page 28 of 204