Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விதிமீறல் கட்டடங்கள்: நடவடிக்கையை கைவிட்டதா மாநகராட்சி

Print PDF
தின மணி            25.02.2013

விதிமீறல் கட்டடங்கள்: நடவடிக்கையை கைவிட்டதா மாநகராட்சி

மதுரை நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.

விதிமீறிய கட்டடங்களைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்த நிலையில், தற்போது அதன் மீதான தொடர் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மேல்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மாநகராட்சி பகுதியில் 2006 முதல் 2011 வரை,  ஏராளமான கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரைபட அனுமதி வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மீனாட்சி கோவிலின் பழமையை பாதுகாக்கும் வகையில், கோவிலின் சுற்றுச் சுவரில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு 9 மீட்டருக்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்ற தடை உள்ளது. இந்தத் தடைகளை மீறியும், கட்டட விதிகளை மீறியும், கோவிலைச் சுற்றிலும் பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதோடு மாநகராட்சி அதிகாரத்தை மீறி, உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டிய நூற்றுக்கணக்கான கட்டடங்களுக்கும், மாநகராட்சியிலேயே முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும் நகரமைப்பு அலுவலர்கள் மூலம், முதல்கட்டமாக மீனாட்சி கோவிலைச்  சுற்றிலும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில், அந்தப் பணி தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு  ஆட்சியர் உத்தரவின்பேரில், விதிமீறல் கட்டடங்கள் சிலவற்றுக்கு மாநகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். அந்த கட்டடங்களின் உரிமையாளர்களும் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் கட்டடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விதிமீறல் கட்டடங்களைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்த நிலையில், தற்போது அதன் மீதான தொடர் நடவடிக்கை முடங்கி உள்ளது. இதனால், மேல்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, மாநகராட்சியில் நடைபெற்ற பெரும்பாலான விதிமீறல்கள், முறைகேடாக வரைபட அனுமதி வழங்கியது உள்ளிட்ட புகார்களுக்கு ஆளான அதிகாரியை, மீண்டும் மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவுக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வெளிமாவட்டத்தில் பணியாற்றி வரும் அவரை, மீண்டும் மாநகராட்சிக்கு அழைத்துவர நடைபெறும் முயற்சி, மாநகராட்சி வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரத்தை மீறி வரைபட அனுமதி வழங்கியது, விதிமீறல் கட்டடங்கள் குறித்து  நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு,    ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார்.

அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தொய்வின்றி  விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Last Updated on Tuesday, 26 February 2013 06:58
 

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தின மணி          23.02.2013

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ள முக்கிய சாலைகளில் ஆக்ரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

மீன் சந்தை முதல் பேருந்து நிலையம் வரையிலான சாலை, சர்ச் சாலை, மோதிலால் தெரு, ஜான் செல்வராஜ் நகர், காசி விஸ்வநாதர் கோவில் சாலை மற்றும் சுற்றுப் பகுதிகள் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளாக உள்ளன.இப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து நகராட்சி அலுவலர்கள்,   போலீஸார் இணைந்து இச்சாலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை பொக்லின் இயந்திரம் மூலம்  அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Last Updated on Monday, 25 February 2013 12:03
 

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

Print PDF
தின மணி          23.02.2013

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்


குடியாத்தம் அருகே ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 6 குடிசைகளை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருகே உள்ள நாராயணசாமி தோப்பு பகுதியில் கௌன்டன்யா ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் வியாழக்கிழமை இரவு குடிசைகளை அமைத்துள்ளனர்.

தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன் தலைமையில், துணை வட்டாட்சியர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், இளங்கோ உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அங்கு சென்று குடிசைகளை அகற்றினர்.

Last Updated on Monday, 25 February 2013 12:01
 


Page 29 of 204