Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத் துறைக்கு ரூ.3,391 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 28.07.2009

சுகாதாரத் துறைக்கு ரூ.3,391 கோடி ஒதுக்கீடு

திருவாரூர், ஜூலை 27: தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நிகழாண்டில், ரூ. 3,391 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா, ஏதேனும் தவறு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் கால தாமதமாக வந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூரில் மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

திருவாரூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என இரு பிரிவுகளாக உள்ளது. போதுமான இடவசதியில்லாததால் இங்கு தேவையான வசதிகள் செய்ய முடியவில்லை.

புதிய கட்டடம் கட்டப்பட்ட பிறகு, இன்னும் 6 மாத காலங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழு வசதிகளுடன் செயல்படும். அதுவரை பொதுமக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்களைத் தேர்வு செய்ய தனியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

முதல்வரால் ஜூலை 23-ல் தொடக்கி வைக்கப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ. 72,000-த்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 4 கோடிப் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்றார் அமைச்சர்.

மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, மருத்துவர்கள், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, மருந்து இருப்புப் பதிவேடு ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளைத் விரைவுபடுத்தவும், கட்டுமானத் தொழிலாளர்களைக் கூடுதலாக ஈடுபடுத்தி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (ஆய்வு) ராமச்சந்திரரெட்டி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) . கோவிந்தசாமி, துணை இயக்குநர் (சுகாதாரம்) சகாயமேரி ரீட்டா, பொதுப் பணித் துறை (கட்டடம்) செயற்பொறியாளர் ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.