Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்துவமனைகளிலும் காப்பீட்டு திட்டம்

Print PDF

தினமணி 01.08.2009

அரசு மருத்துவமனைகளிலும் காப்பீட்டு திட்டம்

சென்னை, ஜூலை 31: ஏழைகளுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் அமலுக்கு வர உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். விநாயகம் தெரிவித்தார்.

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.1 லட்சம் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை இலவசமாகப் பெறும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்று பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக டாக்டர் எஸ். விநாயகம் கூறியதாவது:-

""சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஏற்கெனவே பல ஏழை நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதய சிகிச்சை, கல்லீரல் நோய் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை உள்பட 51 வகையான நோய்களில் பெரும்பாலானவற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் குறிப்பிடும்படியான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே உள்ளதால், இவற்றில் காப்பீட்டுத் திட்டம் இன்னும் 10 தினங்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...: சென்னையைப் போன்று செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை ஏழைகள் பெறும் வசதிகள் விரைவில் செய்யப்படும். இதே போன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் வசதி செய்யப்படும்'' என்றார் டாக்டர் விநாயகம்.

சாதக அம்சம் என்ன? தமிழகம் முழுவதும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 341 தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரையில் ஏழை நோயாளிகள் பலன் பெற முடியும்.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவு ரூ.1 லட்சத்தைவிட அதிகரிக்கும் நிலையில், கூடுதல் தொகையை ஏழை நோயாளிகள் செலுத்த முடியாமல் திணற வேண்டியிருக்கும். ஆனால், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சையைப் பெறும் நிலையில் கூடுதல் தொகையை ஏழைகள் செலுத்த வேண்டியிருக்காது என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.