Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரியின் குறுக்கே புதிய நீர்மின் திட்டங்கள்: தொடரும் சிக்கல்

Print PDF

தினமணி 18.08.2009

காவிரியின் குறுக்கே புதிய நீர்மின் திட்டங்கள்: தொடரும் சிக்கல்
சென்னை, ஆக. 17: காவிரியின் குறுக்கே நான்கு நீர் மின் திட்டங்கள் தொடங்குவது குறித்த கர்நாடகத்தின் பிடிவாதம் தொடர்கிறது.

இதனால், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படவில்லை.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் விசாரணை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு மீண்டும் கூடுவது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் சிவசமுத்திரம், மேகதாது ஆகிய இரண்டு இடத்திலும், தமிழகத்தில் ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய இடங்களிலும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் திட்டமிட்டது.

அதில், சிவசமுத்திரத்துக்கு மட்டும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட மத்திய அரசு துறைகள் ஒப்புதல் அளித்துள்ளன. மற்ற மூன்று இடங்களில் வனவளம், அங்கு வாழும் மக்களை இடமாற்றுவது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன.

இந்த நிலையில், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் பொதுப்பணி மற்றும் எரிசக்தித் துறைகளின் உயரதிகாரிகள் கூட்டம், மத்திய எரிசக்தித் துறை செயலாளர் எச்.எஸ்.பிரம்மா தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""நான்கு தென் மாநிலங்களிலும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது அவசியம். நான்கு நீர்மின் நிலையங்களை அமைப்பதன் மூலம், 1,200 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும். காவிரி நடுவர்மன்றம் தீர்ப்புக் கூறினாலும், தமிழகமும் கர்நாடகமும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளோம். அடுத்த கட்ட கூட்டம், பெங்களூரில் நடைபெறும்'' என்றார்.

கூட்டத்தில் தங்கள் தரப்பு கருத்துகளை எடுத்துக் கூறிய, கர்நாடக எரிசக்தித் துறை செயலாளர் கே. ஜெய்ராஜ், ""சிவசமுத்திரம் பகுதி கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் வருகிறது. அங்கு, 375 மெகா வாட் திறனுடைய மின் நிலையத்தை கர்நாடக அரசுக்குச் சொந்தமான பவர் கார்ப்பரேஷன் மூலம் அமைக்கப்படும்'' என்றார்.

தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பொதுப்பணித் துறை செயலாளர் ராமசுந்தரம், ""20 டி.எம்.சி. தண்ணீரை முதலில் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். நான்கு நீர் மின் திட்டங்களும் தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் மூலம் தொடங்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.

தில்லியில் கடந்த மாதமும், சென்னையில் திங்கள்கிழமையும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், காவிரியின் குறுக்கே நீர் மின் திட்டங்கள் தொடங்குவதில் உள்ள பிரச்னைகள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, நீர் மின் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க நான்கு மாநில அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.